தேசத்தை முதன்மையாக நினைத்து நேசித்த கேப்டன் அனுஜ் நாய்யர்

தேசத்தை முதன்மையாக நினைத்து நேசித்த கேப்டன் அனுஜ் நாய்யர்
“வெறும் காற்றடிப்பதால் மட்டுமே நமது கொடி பறந்துவிடவில்லை,அதை பாதுகாக்க தன் கடைசி மூச்சுள்ளவரை போராடிய வீரமான வீரர்களால் தான் பறக்கிறது”
ஜீலை 26,1999ல் இந்திய படைகள் பாகிஸ்தானுக்கெதிராக ஒரு அபாயகரமான போரில் தீர்க்கமான வெற்றியை சுவைத்திருந்தனர்.இந்த மூர்க்கமான போரில் கார்கிலில் தங்களை எப்போதும் அரவணைக்காத ஒரு நிலத்தில் நாட்டிற்காக போராடி நிறைய இளம் வீரர்கள் நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர்.
கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்துவிட்டன.ஈடுஇணையற்ற வீரம் மற்றும் தியாகத்தால் நாம் கார்கிலில் வெற்றியை சுவைத்தோம்.அதற்காக தன்னுயிர் ஈத்த வீரர்களை  இந்தியர்கள் தங்கள் நினைவில் வைத்துள்ளனர்.
இது கார்கில் நாயகன் கேப்டன் அனுஜ் அவர்களின் கதை.
ஆகஸ்டு 28,1975ல் பிறந்து டெல்லியில் வளர்ந்தார் அனுஜ்.அவரது அப்பா S K நாய்யர் டெல்லி பொருளாதார பள்ளியில் பேராசிரியர் மற்றும் அவரது தயார் மீனா நாய்யர் டெல்லி பல்கலையில் நூலகத்தில் பணிசெய்தார்.
தௌலா குவான் இராணுவ பொது பள்ளியில் பயின்ற அனுஜ் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் கெட்டிக்காரர்.சிறந்த கைப்பந்து வீரராகவும்,நெடுந்தூர ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்த அனுஜ் தனது சிறு வயதில் இருந்தே சிறந்த தேசாபிமானி.அவர் இளம் வயதில் இருந்தே இராணுவத்தில் இணைவதை தனது கனவாக கொண்டிருந்தார்.மற்றும் அவர் தனது நேசத்திற்குரிய கனவை தேசியப் பாதுகாப்பு அகாடமியில் இணைந்து நிறைவேற்றிக்கொண்டார்.அவர் எக்கோ ஸ்குவாட்ரானில் இணைந்தார்.
” அவரது கணித ஆசிரியர் அவரை ‘a bundle of energy’ என அழைப்பாராம்.இங்குமங்குமாக சோர்வடையாமல் ஓடும் துரு துரு பையன் அவர்.அவர் பள்ளியில் சிறந்த கைப்பந்து வீரராகவும் இருந்தார்.நாங்கள் அவரை விளையாட வேண்டாம் என கூறுவோம் ஏனெனில் அவர் விளையாடும் போது சட்டையை பாழ்படுத்திவிடுவார்.அதிலிருந்து அவர் தனது சட்டையை கழற்றி வைத்துவிட்டு விளையாட செல்வார்.இது போன்றுள்ள ஒருவரை நாட்டிற்கு அவர் சேவை செய்ய விரும்புவதை யார் தடுக்க முடியும்?” என அவரது அப்பா கூறுகிறார்.
1997ல் அனுஜ் இந்தியன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி முடித்து 17வது பட்டாலியன் ஜாட் ரெஜிமென்டில் இணைந்தார்.கார்கில் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் மிகப் பெரிய அளிவில் ஊடுருவியிருப்பது தெரிந்தவுடன் இளம் அதிகாரியான அவர் கார்கில் பகுதிக்கு அனுப்பப்பட்டார்.
ஊடுருவியிருப்பவர்களை அடித்து துவம்சம் செய்ய இந்திய இராணவம் மாபெரும் அளவில் படைகளை நகர்த்தியது.அனுஜ் அவர்களின் படை பாய்ன்ட் 4875 என்ற மலைப் பகுதியை கைப்பற்ற அனுப்பப்பட்டது.இந்த மலைப் பகுதி பாகிஸ்தானியர்களால் ஊடுருவப்பட்ட டைகர் ஹில் மலைப்பகுதியின் மேற்குபகுதியில் அமைந்திருந்தது.
பாய்ன்ட் 4875 மலைப் பகுதியின் அமைவிடம் மற்றும் முக்கியத்துவம் காரணமாக அதை மீட்பது இந்திய இராணுவத்தின் முதன்மை பணியாக இருந்தது.எலும்பை ஊடுருவக்கூடிய குளிருடன் 80டிகிரி அளவுக்கு செங்குத்தாக இருந்தது அந்த மலை.கடும் மூடுபனி அந்த மலையை ஆபத்தானதாக மாற்றியிருந்தது.மலையின் 16,000 அடி உயரத்தில் பாகிஸ்தானியர்கள் நிலைகொண்டிருந்தனர்.வான்படை உதவியில்லாமல் இந்த மலையை மீட்பது ஏறக்குறைய முடியாத காரியமாக இருந்தது.
ஆனால் வான்உதவிக்காக காத்திருக்க முடியாத நிலை.தாமதம் பாகிஸ்தானுக்கு மேலதிக படைகளை மலைமீது குவித்து தன் வலிமையை பெருக்க சாதகமாக அமையலாம்.எனவே வான் உதவி இல்லாமலேயே அனுஜ் அவர்களின் சார்லி கம்பெனி மலையை மீட்க கிளம்பியது.ஜீலை 6, மிகவும் கடினமான மலைசார் போர்முறையே மேற்கொண்டு பாய்ன்ட் 4875ஐ கைப்பற்ற அனுஜ் அவர்களின் படை கிளம்பியது.
மிக்கடினமாக படைப்பிரிவு மலையேற்றத்தை தொடங்கியது.எதிரிக்கு நமது வீரர்கள் மலை ஏறி வருவது தெரிய அவர்கள் மோர்ட்டார் மற்றும் தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.இந்த தாக்குதலில் சார்லி கம்பெனியின் கமாண்டர் காயமடைய , படைப் பிரிவு இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு கேப்டன் அனுஜ் தலைமையில் ஒரு குழுவும், கேப்டன் விக்ரம் பத்ரா தலைமையில் ஒரு குழுவும் புறப்பட்டன.
வலிமையும் வல்லமையும் மிக்க சேர்ஷா என்றழைக்கப்பட்ட விக்ரம் பத்ரா உதவியுடன் அனுஜ் மிக கொடூரமான முறையில் பதிலடியை தொடங்கினார்.கைகளால் எதிரிகளை தாக்கி எதிரி பங்கர்களை துவம்சம் செய்து தமது வீரர்களை முன்னே செல்ல ஊக்குவித்து இந்த மாவீர்கள் பயத்தில் இருந்த எதிரிகளை பின்வாங்க செய்தனர்.
எதிரி நிலைகளில் சூறாவளியாய் வீரர்கள் சுழன்றடித்தனர்.இந்த நேரத்தில் இந்திய வீரர்களின் முன்னேற்றத்தை தடுத்த பிம்பிள் கட்டுமானத்தில் இருந்த இயந்திர துப்பாக்கிகளை அமைதியாக்க தனது வீரர்களை வழிநடத்தி சென்றார்.அங்கு மூன்று இயந்திர துப்பாக்கிகளும் அமைதியாக்கப்பட்டன.தனது உயிரை பற்றி சிறிதளவும் கவலை கொள்ளாமல் கேப்டன் அனுஜ்  மட்டுமே ஒன்பது எதிரிகளை வீழ்த்தியிருந்தார்.
அவருடைய தந்திரமான தாக்குதல் காரணமாக அவரும் அவரது வீரர்களும் நான்கு பங்கர்களில் மூன்று பங்கர்களை கைப்பற்றியிருந்தனர்.அவர்கள் நான்காவது பங்கரை நோக்கி சென்ற போது ஒரு ராக்கெட் கிரேனேடு நேரடியாக கேப்டன் அனுஜ் அவர்களை தாக்கியது.இதில் அவர் படுகாயமடைந்தார்.
அவரது தன்னம்பிக்கை நிறைந்த விடாப்பிடியான வீரம் காரணமாக அந்த 23 வயதே ஆன கேப்டன் தனதுவீரர்களை நான்காவது பங்கரை நோக்கி வழிநடத்தினார்.வீரர்களின் அதிரடி நடவடிக்கை மற்றும் கேப்டனின் உந்துதலால் நான்காவது பங்கரும் கைப்பற்றப்பட்டது.கைப்பற்றிய உடனே தான் தன் கண்களை மூடி முடிவில்லா நித்திரைக்கு சென்றார் கேப்டன்.அவரது பெயர் இந்தியாவின் ஆகச்சிறந்த வீரர்கள் வரிசையில் பொறிக்கப்பட்டு இந்தியர்கள் மனதில் நீங்காப் புகழோடு வாழ்கிறார்.இந்தியர்கள் மறக்காத வரை மாவீரர்களுக்கு இறப்பில்லை.அவர்கள் நமது நினைவில் என்றும் வாழ்வார்.
“அவர் அதிஅற்புதமான அதிகாரி.வெற்றிக்களிப்பு அடங்கிய பிறகு தான் வீரர்களின் வீரமரணம் குறித்து தெரியவந்தது.நாம் ஆகச் சிறந்த இளம் அதிகாரிகளை இழந்திருந்தோம்.எங்களை அந்த நிலையை கைப்பற்ற வைத்த மனிதர் அந்த வெற்றிய கொண்டாட நம்மோடு இல்லை” என டெல்டா கம்பெனி கமாண்டர் வீர் சக்ரா பெற்ற வீரர் கலோனல் தீபக் ராம்பால் கூறினார்.
அடுத்த நாள் காலை வீரர்கள் பிம்பிள் காம்ப்ளக்சை (தற்போது விக்ரம் பத்ரா டாப் என்று அழைக்கப்படுகிறது) கைப்பற்றினர்.ஆனால் அந்த சண்டையில் கேப்டன் அனுஜ் அவர்களின் நண்பர் கேப்டன் விக்ரம் பத்ரா வீரமரணம் அடைந்திருந்தார்.பாய்ன்ட் 4875 கைப்பற்றப்பட்டதால் அது டைகர் ஹில் மலைப்பகுதியை மீட்க வழிவகுத்தது.இதனால் பாகிஸ்தானியர்கள் போருக்கு முந்தைய நிலைக்கு பின்வாங்கினர்.
கேப்டன் அனுஜ் அவர்களுக்கு தேசம் தான் எப்போதும் முதன்மை.அவர் தைரியம் மற்றும் அர்பணிப்புக்கு உதாரணமாக திகழ்கிறார்.அவன் தனது சத்தியத்தின் படியே செயல்பட்டார்.அவர் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில்…
“நாட்டுக்காக எனது பணியை செய்து முடிக்காமல் மரணமடையும் அளவுக்கு நான் பொறுப்பற்றவன் இல்லை.எனது இராணுவமும் எனது நாடும் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.இந்த நேரத்தில் சாவைப் பற்றி நினைப்பது தவறு.அங்கு கடைசி எதிரி இருக்கும் வரை நான் சுவாசித்துக்கொண்டிருப்பேன்” என தன்னுடைய நாட்டின் மீதான தனது நேசத்தை வெளிப்படுத்துகிறார்.
பாயிண்ட் 4875ஐ கைப்பற்ற செல்லும் முன் தனது திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட மோதிரத்தை கழற்றி தனது கமாண்டிங் அதிகாரியிடம் கொடுத்து , தான் திரும்பி வராவிட்டால் தனது மணப்பெண் டிம்மியிடம் இதை ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.
அவர்கள் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்டு  ஒரு வருடம் ஆகியும்,போர் முடிந்தால் அந்த வருட செப்டம்பரில் திருமணம் நடக்கவிருந்தது.ஆனால் அவர் வீடு திரும்பவே இல்லை.
அவரது வீரம் மற்றும் தலைமைப் பண்பு காரணமாகவும்,எதிரிகளை  தைரியத்துடன் வீழ்த்தியதற்காகவும் அவருக்கு இராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான மகாவீர் சக்ரா வழங்கப்பட்டது.
கேப்டன் விக்ரம் பத்ரா அவர்களுக்கு இராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப்பட்டது.
கார்கில் போரில் நாடு மற்றும் இந்நாட்டு மக்களை காக்க தன்னுயிரை தியாகம் செய்த 527 வீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.
வீரவணக்கம்

Leave a Reply

Your email address will not be published.