ஆயுத விற்பனை நாடாக மாறிய இந்தியா..!

மியன்மார் நாட்டிற்கு முதல்முறையாக இந்தியா நீர்மூழ்கி கப்பலை விற்பனை செய்ய உள்ளது. இதுவரை ஆயுத கொள்முதல் நாடாகவே இருந்த இந்தியா இப்போது ஆயுத விற்பனை நாடாகவும் மாறி உள்ளது.

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளுக்கு ஆயுதம் விற்பனை செய்வதிலும், அந்த நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்துவதிலும் சீனா கடந்த சில ஆண்டுகளாகவே மிக தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு வங்க தேசத்திற்கு 17 அடி நீளமும், 2.11 மில்லியன் கிலோ எடையும், மணிக்கு 33 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றலும் ,980 அடி ஆழம் வரை செல்லும் திறனும் கொண்ட மிங் வகையைச் சேர்ந்த இரு நீர்மூழ்கி கப்பல்களை சீனா விற்பனை செய்தது.

இதே போன்ற இரு நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடம் இருந்து வாங்க தாய்லாந்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதவிர சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் தனது நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய சீனா ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் மியான்மார் நாட்டிற்கு நீர்மூழ்கி கப்பல்களை தருவதாக சீனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சுற்றிலும் சீனா தனது ராணுவ கரத்தை பரப்பி வரும் நிலையில், இந்தியாவும் தனது அண்டை நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

இதனையடுத்து மியான்மார் நாட்டுடனான ராணுவ உறவை வலுப்படுத்த கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இதில் முதற்கட்டமாக நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்க உதவும் செய்னா ரக நீரடி வெடிகுண்டுகளை மியான்மாருக்கு விற்பனை செய்ய இந்தியா அரசு 2017-ஆம் ஆண்டில் 38 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்தது.

220 கிலோ எடையும் 50 கிலோ வெடிபொருளுடன், 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கும் வல்லமையும் கொண்ட செய்னா நீரடி வெடிகுண்டுகளை கடந்த 13-ஆம் தேதி அன்று இந்தியா அரசு மியான்மாருக்கு விற்பனை செய்தது. இதைத் தொடர்ந்து மியான்மார் நாட்டுக்கு நீர்மூழ்கி கப்பலையும் இந்தியா விற்பனை செய்ய உள்ளது.

 ரஷ்யாவிடம் இருந்து 1980 ஆம் ஆண்டு வாங்கி இந்தியாவில் நவீனப்படுத்தப்பட்ட ஐ.என்.எஸ். சிந்து வீர் என்ற நீர்மூழ்கி கப்பலை விற்பனை செய்ய இந்தியா அரசு மியான்மர் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 229 அடி நீளமும், நீருக்கு அடியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனும் கொண்ட அந்த நீர்மூழ்கி கப்பல் 1988, 1999, 2018 ஆகிய ஆண்டுகளில் நவீனப்படுத்தப்பட்டது.

இப்போது விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில், 3000 டன் எடை கொண்ட அந்த கப்பலை, மியான்மர் நாட்டின் கடற்படைக்கு ஏற்ப புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில வாரங்களில் ஐ.என்.எஸ். சிந்துவீர் கப்பலை, இந்திய அரசு முறைப்படி மியான்மர் அரசிடம் ஒப்படைக்க உள்ளது. இதன் மூலம் இந்தியா ஆயுத விற்பனையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.