கார்கிலின் சிங்கம்: இந்திய இராணுவ நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா

கார்கிலின் சிங்கம்: இந்திய  இராணுவ நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா
“வெறும் காற்றடிப்பதால் மட்டுமே நமது கொடி பறந்துவிடவில்லை,அதை பாதுகாக்க தன் கடைசி மூச்சுள்ளவரை போராடிய வீரமான வீரர்களால் தான் பறக்கிறது”
ஜீலை 26, 1999,இந்திய படைகள் பாகிஸ்தானுக்கெதிராக ஒரு அபாயகரமான போரில் தீர்க்கமான வெற்றியை சுவைத்திருந்தனர்.இந்த மூர்க்கமான போரில் கார்கிலில் தங்களை எப்போதும் அரவணைக்காத ஒரு நிலத்தில் நாட்டிற்காக போராடி நிறைய இளம் வீரர்கள் நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர்.
கிட்டத்தட்ட 18 வருடங்கள் கடந்துவிட்டன.ஈடுஇணையற்ற வீரம் மற்றும் தியாகத்தால் நாம் கார்கிலில் வெற்றியை சுவைத்தோம்.அதற்காக தன்னுயிர் ஈத்த வீரர்களை  இந்தியர்கள் தங்கள் நினைவில் வைத்துள்ளனர்.
இது கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா அவர்களின் வீரக்கதை இது
செப்டம்பர் 9,1974ல் ஹிமாச்சலில் பிறந்த பத்ரா அவர்கள் தனது குழந்தை பருவத்தை பலம்பூர் என்ற அழகிய மலைப்பிரதேசத்தில் கழித்தார்.
இரட்டை குழந்தைகளில் முதலாவது பிறந்தவர் பத்ரா.அவர் பிறந்த 14 நிமிடத்திற்கு பிறகு அவரது சகோதரர் வியஹல் பிறந்தார்.அவரது அப்பா கிர்தாரி லால் பத்ரா அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் அவரது அம்மா கமல் கந்த் பள்ளி ஆசிரியை.
தன் சகாக்கள் மற்றும் ஆசியர்களிடையே பெரும் மதிப்போடு மதிக்கப்பட பத்ரா அவர்கள் அனைத்திலும் சிறந்தவர்.
படிப்பில் சிங்கம் என்றால் விளையாட்டில் அவர் புலி.வடஇந்தியாவின் சிறந்த NCC வீரர் என்ற பட்டம் பெற்றவர்.கரேத்தேயில் பச்சை பெல்ட் பெற்றவர்.தேசிய அளவில் டேபிள்டென்னிஸ் விளையாடிவர்.இவைகள் விக்ரம் பத்ரா யார் என்பதை உங்களுக்கு உணர்த்தும்.
சிறுவயதில் இருந்தே ஆழமான தேசாபிமானி.சிறுவயதிலேயே அவர் தனது கனவை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.வேறு என்ன ! இராணுவம் தான் அவரது லட்சியம்.
1995ல் இளங்கலை படிப்பை முடிந்தவுடன் Combined Defense Services (CDS) தேர்வுக்கு தன்னை தயார் செய்தது அவரது குடும்பத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது.ஆனால் இந்த நேரத்தில் ஹாங்காங்கை தளமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் மெர்ச்சண்ட் நேவியில் அவருக்கு பணி கிடைத்தது.ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை.அவர் அம்மாவிம் இவ்வாறு கூறுகிறார்..
“பணம் தான் வாழ்வில் எல்லாம் என்று இல்லை.நான் என் வாழ்வில் பெரிதாக சாதனை செய்ய விரும்புகிறேன்.பெரிதாய் , தனிச்சிறப்புடையதாய் ; எனது நாட்டிற்கு”
1996ல் அவரது கனவு நினைவானது.
அவர் CDS தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தியன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி பெற்று லெப்டினன்டாக இராணுவத்தில் இணைந்தார்.அவரது முதல் பணி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில்  தான்.
1999ல் கார்கில் போர் தொடங்கிய போது அவர் பெலகமில் கமாண்டோ பயிற்சி முடித்து ஹோலி கொண்டாட அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்.அவர் எப்போதும் வீடு சென்றாலும் தனது நண்பருடன் அருகே உள்ள நீயுகல் கபேவில் காபி அருந்துவது வழக்கம்.
“போர் தொடங்கிவிட்டது,யாருக்கு தெரியும் உன்னை திரும்பி வர சொல்லலாம்,நீ பத்திரமாக இரு” என நண்பர் கூற..
“கவலை வேண்டாம்.ஒன்று அந்த மலைமீது இந்தியக்கொடியை பறக்கவிட்டு வெற்றியோடு வருவேன் அல்லது அந்த கொடியில் சுற்றப்பட்டு வருவேன்.ஆனால் நான் வருவது உறுதி” என விக்ரம் தனது நண்பருக்கு பதிலளித்துள்ளார்.
இதன் பிறகு விக்ரம் அவர்களின் படைப்பிரிவு கார்கில் செல்ல உத்தரவு வந்தது.விக்ரம் ஜீன் 1,1999ல் தனது படையுடன் இணைந்து கொண்டார்.18 நாட்களுக்கு பிறகு,19 ஜீன் 1999ல் அவரது படைப்பிரிவிற்கு பாய்ன்ட்  5140 என்ற மலைப்பகுதியை கைப்பற்ற உத்தரவு வந்தது.
எதிரிகள் உயரமான மலைமுகட்டில் நன்கு கட்டமைக்கப்பட்ட பங்கர்களில் இருந்தனர்.கேப்டன் விக்ரம் மற்றும் அவரது வீரர்கள் அதிபுத்திசாலிதனமான தாக்குதலை எதிரிகள் மீது நிகழ்த்தினர்.எதிரி பங்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டன.13வது பட்டாலியன் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி ரெஜிமென்ட் (கேப்டனின் பட்டாலியன்) வெற்றியைச் சுவைத்து தன்னை அங்கு வலுப்படுத்தி கொண்டது.இந்த தாக்குதலில் நான்கு எதிரிகளை கைகளாலேயே வீழ்த்தினார் கேப்டன் பத்ரா.இந்த வெற்றி அதன் பிறகு டைகர் ஹில் பகுதியை மீட்க உதவியது குறிப்பிடத்தக்கது.
உயிர்ச்சேதமே இல்லாமல் கேப்டன் மற்றும் அவரது வீரர்கள் மலைப்பகுதியை கைப்பற்றியது பெருமகிழ்ச்சியை கேப்டனுக்கு ஏற்படுத்தியது.”யே தில் மங்கே மோர்” (என் மனது நிறைய கேட்கிறது) என கேப்டன் தனது கமாண்டரிடம் கூறினார்.இது அவர் இன்னும் நிறைய போரில் பங்கெடுக்க ஆசைப்படுவதை காட்டுகிறது.இந்த வார்த்தைகள் இன்று மிகப் பிரசித்தம்.
பாகிஸ்தானியர்களிடமிருந்து கைப்பற்றிய விமான எதிர்ப்பு துப்பாக்கியுடன் அந்த இளம் கேப்டன் சிரித்து கொண்டிருந்த புகைப்படம் இந்தியாவெங்கும் பரவியது.தொலைக்காட்சிகளால் நேரடியாக ஔிபரப்பப்பட்ட கார்கில் போரின் இந்த புகைப்படம் இந்திய மக்கள் மனதில் நிலையாக தங்கிவிட்டது.
ஜீன் 20 அன்று காலை வந்த கேப்டன் விக்ரமின் தொலைபேசி அழைப்பை அவரது அப்பா நினைவு கூர்கிறார்.அவரது மகனின் குரலை அடையாளம் கண்டுபிடிக்க அவருக்கு சிலநிமிடங்கள் பிடித்தது.அவர் சேட்டிலைட் போனில் கரகரப்புக்கு நடுவே பேசியுள்ளார்.
“அப்பா , நான் எதிரி நிலையை கைப்பற்றிவிட்டேன் I’m OK, I’m OK.”
“மகனே (Beta), உன்னை நினைத்து பெருமை படுகிறேன்.நீ உன் பணியை தொடர கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பேசியுள்ளார்.
9 நாட்களுக்கு பிறகு அடித்தள முகாமில் இருந்து மற்றுமொரு நடவடிக்கைக்கு கிளம்பும் முன் கவலையடைந்திருந்த தனது வீட்டிற்கு போன் செய்தார்.
, “Ek dum fit hoon, fikar mat karna (நான் நன்றாக உள்ளேன்.கவலை வேண்டாம்.)”. தனது குடும்பத்தாரிடம் கேப்டன் கடைசியாக பேசியது இந்த வார்த்தை தான்.
விக்ரம் மற்றும் அவரது படைப் பிரிவின் அடுத்த இலக்கு பாய்ன்ட் 4875ஐ கைப்பற்றுவது.17,000அடி உயரமுள்ள இந்த மலையை கைப்பற்றிய போர் கார்கில் போரிலேயே கடினமான சில தாக்குதல்களில் ஒன்று.
பாய்ன்ட் 4875 மலைப் பகுதியின் அமைவிடம் மற்றும் முக்கியத்துவம் காரணமாக அதை மீட்பது இந்திய இராணுவத்தின் முதன்மை பணியாக இருந்தது.எலும்பை ஊடுருவக்கூடிய குளிருடன் 80டிகிரி அளவுக்கு செங்குத்தாக இருந்தது அந்த மலை.கடும் மூடுபனி அந்த மலையை ஆபத்தானதாக மாற்றியிருந்தது.மலையின் 16,000 அடி உயரத்தில் பாகிஸ்தானியர்கள் நிலைகொண்டிருந்தனர்.வான்படை உதவியில்லாமல் இந்த மலையை மீட்பது ஏறக்குறைய முடியாத காரியமாக இருந்தது.
ஜீலை 7 இரவு விக்ரம் மற்றும் அவரது படைப்பிரிவு மலையேற தொடங்கியது.நமது வீரர்கள் மலையேறுவது பாக் வீரர்களுக்கு தெரிந்து போக மோர்ட்டார்கள் மற்றும் தானியங்கி ஆயுதங்கள் உதவியுடன் தாக்க தொடங்கினர்.கேப்டன் விக்ரம் பத்ராவும் வருவதை பாகிஸ்தானியர்கள் அறிந்திருந்தனர்.சேர்ஷா என்று அழைக்கப்பட்ட கேப்டன் விக்ரம் தனது வீரதீர செயல்களால் இருநாட்டு வீரர்களிடேயேயும் அறியப்பட்டிருந்தார்.
விக்ரம் மற்றும் அவரது சகநண்பர் கேப்டன் அனுஜ் அவர்கள் உதவியுடன் கடும் தாக்குதலை நடத்தினார்.முன்னோக்கி சென்று தாக்குவது,வீரர்களை வழிநடத்துவது மற்றும் வீரர்களை உற்சாகப்படுத்துவது என அவர்கள் முன்னேறி சென்றுகொண்டிருந்தனர்.
மலையைக் கைப்பற்றும் நடவடிக்கை கிட்டத்தட்ட முடிந்த வேளையில் அவருடன் வந்த சக இளைய அதிகாரி வெடிப்பில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டது.பங்கரில் இருந்த கேப்டன் எழுந்து வந்து அவரை மீட்க கிளம்பினர்.அவரது சுபேதார் வீரர் ஒருவர் அவரை தடுத்து நீங்கள் செல்ல வேண்டாம் நான் செல்கிறேன் என கெஞ்சினார்.
அதற்கு பதிலளித்த கேப்டன் விக்ரம்: “Tu baal-bacchedar hain, hat ja peeche.” (உங்களுக்கு குழந்தைகள் உள்ளது, வழிவிடுங்கள்)”.
கடும் துப்பாக்கி சூடுகளுக்கு மத்தியில் எதிரி நிலையில் கிரேனேடை வீசி தாக்கி ஐந்து பாகிஸ்தானியர்களை வீழ்த்தி காயம்பட்ட லெப்டினன்டை மீட்க நெருங்கினார்.பாய்ந்து லெப்டினன்டை தூக்க முனைந்த வேளையில் எதிரியின் தோட்டா அவரது நெஞ்சில் பாய்ந்தது.
அவரது கடைசி வார்த்தைகள் “ஜெய் மாதா தி”.அதாவது துர்கை அம்மாவிற்கே வெற்றி என்ற போர்க்குரலே.
நடவடிக்கை முடிந்த போது அவர் வீரமரணம் அடைந்திருந்தாா்.எதிரிகள் விரட்டப்பட்டு அந்த நாள் காலை மலை கைப்பற்றப்பட்டது.அவரது நண்பர் கேப்டன் அனுஜ் நாய்யர் அவர்களும் வீரமுடன் போரிட்டு வீரமரணம் அடைந்திருந்தார்.அந்த மலை தறபோது விக்ரம் டாப் என அழைக்கப்படுகிறது.
அவரது தன்னிறகற்ற தைரியம்,வீரம்,தலைமைப்பண்பு காரணமாக அவருக்கு பரம்வீர் சக்ரா வழங்கப்பட்டது.
வீரவணக்கம் கேப்டன்

Leave a Reply

Your email address will not be published.