“ஸ்பை”யுடன் நெருக்கம் – ரகசியத்தை பகிர்ந்த இராணுவ வீரர் – இந்திய ராணுவம் செய்த அதிரடி..!

பாகிஸ்தானிற்கு உளவுப் பார்த்த பெண்ணிற்கு அதிமுக்கிய ராணுவ ரகசியங்களை பகிர்ந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளங்களில் ராணுவ ரகசியங்களை தெரிந்து கொள்ள, தங்களை பெண்கள் என்று காட்டிக்கொண்டு பாகிஸ்தான் உளவாளிகள் வலம் வருவதாக இந்திய ராணுவம் ஏற்கனவே எச்சரித்தது.
மேலும் ராணுவ வீரர்கள் தங்கள் பதவி, பெயர், அடையாளம் உள்ளிட்ட எந்த தகவலையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர். இதேபோல் ராணுவ சீருடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று எச்சரித்தது.

2015 – 2017 காலக்கட்டத்தில் மட்டும், இதுபோன்ற 5 சம்பவங்கள் பாதுகாப்புத் துறையில் நடந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. அவற்றில் நான்கு சம்பவங்கள் ராணுவத்திலும், ஒன்று விமானப்படையிலும் அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைதளப் பக்கத்தில் நட்பு வட்டாரத்தில் இருந்த பெண்ணுடன், பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பகிர்ந்ததற்காக விமானப்படையை சேர்ந்த உயரதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நர்நௌல் ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் ரவீந்தர் என்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ராணுவத்தின் மிக முக்கியமான ரகசியங்களை, சமூக வலைதளத்தில் தொடர்பில் இருந்த பெண்ணுடன் பகிர்ந்து கொண்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர் கொடுத்த தகவலுக்கு அப்பெண்ணிடம் இருந்து ரூ. 5,000 வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.