ஹர்முஸ் ஜலசந்தியில் இங்கிலாந்து கப்பலுக்கு ஈரானிய கப்பல்கள் தொல்லை கொடுத்ததாக தொல்லை கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்ததை தொடர்ந்து கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று ஈரான் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், சிரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய தடைகளை மீறுவதாகக் கூறி ஈரானிய சூப்பர் டேங்கர் கப்பலை இங்கிலாந்து கைப்பற்றியது.
இது தொடர்பாக பிரிட்டன் “விளைவுகளை” எதிர்கொள்ளும் என்று ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி எச்சரித்திருந்த மறுநாள் ஹர்முஸ் ஜலசந்தியில் இங்கிலாந்து எண்ணெய்க் கப்பலை ஈரானிய கடற்படையை சேர்ந்த 3 கப்பல்கள் மறித்ததாக கூறப்படுகிறது.
தங்கள் பயணத்தை தடுக்கும் வகையில் ஈரான் கடற்படை கப்பல்கள் தொந்தரவு கொடுத்ததாகவும் பிறகு தங்கள் கப்பலில் இருந்து ஆயுதங்களை எடுத்து குறி வைத்த பிறகு ஈரான் கடற்படை கப்பல்கள் விலகிச் சென்றதாகவும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ஈரானின் கப்பல் படை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளது. ஏதேனும் கப்பல்களைக் கைப்பற்ற உத்தரவு கிடைத்திருந்தால் உடனடியாக அவற்றை நிறைவேற்றியிருப்போம் எனவும் ஈரானிய கப்பற்படை கூறி உள்ளது.
Polimer news