Breaking News

பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்கள் – ஒப்புக் கொண்ட இம்ரான் கான்

பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், 40,000 பயங்கரவாதிகள் உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். பாகிஸ்தானில் பயிற்சி பெறும் பயங்கரவாதிகள், காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதாகவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது ஆகியோரும் சென்றனர். பயங்கரவாதிகளுக்கு துணை போனதால் பாகிஸ்தானுக்கு ஆண்டு தோறும் அளித்து வந்த 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை அந்நாட்டு அதிபர் டிரம்ப் நிறுத்தினார்.
மேலும் பாகிஸ்தானுக்கு இதுவரை அமெரிக்கா அளித்து வந்த கடனுதவிகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி உள்ள நிலையில், அதிலிருந்து மீள அமெரிக்காவின் உதவி கோரி, இம்ரான்கான், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  

பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க இம்ரான்கானுக்கு டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் இம்ரான்கானை வலியுறுத்தி உள்ளார். வாஷிங்டனின் இம்ரான்கானை சந்தித்த அவர், பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்துடைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட அமெரிக்க அமைதிக்கான அமைப்பின் கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். அந்த தாக்குதலில் ஈடுபட்ட அல்கொய்தா அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டதாக அவர் கூறினார். ஆனால் தற்போது வரை பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்கள் இருப்பதாகவும், முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரையிலான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 
பாகிஸ்தானில் இருந்து ஆயுத பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலும், காஷ்மீரிலும் தாக்குதலில் ஈடுபடுவதை அவர் ஒப்புக் கொண்டார். இதற்கு முந்தைய பாகிஸ்தான் அரசுகள் ,கடந்த 15 ஆண்டுகளாக உண்மை நிலவரத்தை அமெரிக்காவிடம் எடுத்துக் கூறவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் தமது தலைமையிலான அரசு தான் முதல் முறையாக பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து வருவதாக அவர் கூறினார்.
இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் போதெல்லாம், அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து பயிற்சி அளிப்பதை மத்திய அரசு பலமுறை எடுத்துக் கூறியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக உள்ளது என்பதை இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். நிதி நெருக்கடியால் தள்ளாடும் நிலையில் அரசை காக்க வேறு வழியின்றி இம்ரான்கான் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.