இந்தியக் கடற்படையின் தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-7ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.
2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தகவல் பரிமாற்றத்திற்காக இன்மார்சாட் ((inmarsat)) என்ற பிரிட்டன் நிறுவனத்தையே இந்தியக் கடற்படை சார்ந்து இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டு இஸ்ரோ தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஜிசாட் 7 என்ற செயற்கைக்கோள் மூலம், இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றம் எளிதானது. தற்போது கடற்படையின் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேலும் நவீனப்படுத்தும் வகையில், ஜிசாட் 7ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.
இதற்காக, இஸ்ரோவுடன், ஆயிரத்து 589 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியக் கடற்படை கையெழுத்திட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் கடற்படை கப்பல்கள், நீர் மூழ்கிகள், போர் விமானங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பில் வைத்திருக்கவும், அவை, கரையில் உள்ள செயல்பாட்டு மையங்களுடன் தொடர்பில் இருக்கவும் ஜிசாட் 7ஆர் உதவும்.
Polimer news