இரு மடங்காகும் நீர்மூழ்கி கப்பல்கள்..! கடற்படையை வலிமையாக்க ரூ.45000 கோடி

நாட்டின் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் விதமாக,  நீர்மூழ்கி போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவிடம் 50 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இது தவிர அணுசக்தியால் இயங்கும் நான்கு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகளையும், 6 தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களையும் சீன தனது கடற்படையில் கொண்டு உள்ளது. 2020 ஆம் ஆண்டில் நீர் மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை 70 ஆக உயர்த்த சீன திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிடமோ 13 நீர் மூழ்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன. அவையும் 20 ஆண்டுகள் பழமையானவை.

இதனால் மேலும்  24 நீர்மூழ்கி கப்பல்களை கடற்படையில் சேர்க்க கடந்த 2000 -ஆம் ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது. இதில் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர 45,000 கோடி ரூபாய் செலவில், 24 நீர் மூழ்கி கப்பல்களை கட்டுவது என்றும், அவற்றை உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளலாம் என்றும், நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதோடு, அதன் தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும், கட்டுமான பணிகளில் இந்திய பொருட்களை 50 சதவிகித அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி நிபந்தனை விதித்து இருப்பதாக இந்திய கடற்படையின் போர்க்கப்பல் தயாரிப்பு பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் சக்சேனா கூறியுள்ளார்.

இதே நேரத்தில் இந்திய தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் கடல் பொறியியல் நிறுவனம், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், அரசுக்கு சொந்தமான மாசாகான், கார்டன், கோவா, இந்துஸ்தான், கொச்சி ஆகிய 5 கப்பல் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு நிபந்தனை விதித்து உள்ளது.

45,000 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை கைப்பற்ற பிரான்சின் எஸ்.ஏ குழுமம், ஜெர்மனியின் தைசன்கிரூம் மெரைன் சிஸ்டம்ஸ் நிறுவனம், சுவீடன் நாட்டின் சாப் கோக்கும் நிறுவனம், ஸ்பெயின் நாட்டின் நவன்ந்தியா நிறுவனம், ரஷ்யாவின் ரோபஸ் போரன் எக்ஸ்போர்ட் நிறுவனம் ஆகியவை போட்டி போடுகின்றன.

இதில் ஒன்றான ரஷ்யாவின் ரோபஸ் போரன் எக்ஸ்போர்ட் நிறுவன தலைவரான அலெக்சி ராக்மெனோவ், இந்துஸ்தான் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுடன் இணைந்து ரஷ்யா நீர்மூழ்கி கப்பல்களை கட்டத் தயார் என்றும், தொடர்ந்து பல வாரங்கள் வரை நீருக்கு அடியிலேயே நீர்மூழ்கி கப்பல்கள் இருக்க உதவும், தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் என்றும் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.