நாளை பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான்-2 விண்கலம்

சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் -1 விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்கள் இருப்பதை கண்டறிந்தது. இதையடுத்து நிலவில் தரையிறங்கி தென் துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து வந்தனர். இதற்கான பணிகளானது கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வந்தது.

இதையடுத்து, கடந்த 15ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராக இருந்தனர். ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு 54 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்த போது ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நிறுத்திவைக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்ட நிலையில் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது. தற்போது விண்கலத்தின் பயண நாட்கள் 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளது. விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி தன்னுடைய ஆய்வை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published.