Breaking News

சந்திரயான்-2 விண்கலத்திற்கான கவுண்ட் டவுண் இன்று காலை தொடங்கியது

சந்திரயான்-2 விண்கலத்திற்கான கவுண்ட் டவுண் இன்று காலை தொடங்கியது.

நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை அது உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்’ என்ற சாதனம், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்’ என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்’ என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சந்திரயான்-2 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்தியாவின் கனமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் பாய்கிறது.

அதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுண் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published.