சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கான முன்னேற்பாடுகளை இஸ்ரோ தீவிரப்படுத்தி உள்ளது.
நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக வருகிற 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான ஏவுதளத்தை தயார் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராக்கெட்டை ஏவும் கருவிகளை தயார் நிலைக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். ஏவு தளத்தில் அனைத்து கருவிகளும் முழு அளவில் தயாராக உள்ளனவா என்பதை விஞ்ஞானிகள் முழுமையாக பரிசோதித்து உள்ளனர். வருகிற 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் சந்திரயான் -2 விண்கலம் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நிலாவில் சென்று சேர உள்ளது.
நிலாவை சந்திரயான்-2 விலிருந்து பிரியும் விக்ரம் என்ற விண்கலம், நிலாவில் தரையிறங்கும். அதிலிருந்து பிரக்யான் விண்கலம், நிலாவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்தும். இதுவரை வேறு எந்த நாட்டு விண்கலமும் செல்லாத நிலாவின் தென் முனையில் ஆய்வு நடத்துவதன் மூலம் நிலா குறித்த புதிய தகவல்களை திரட்டுவதை இஸ்ரோ முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.