இந்திய விமானப்படைக்கு 75 பயிற்சி விமானங்கள் வாங்கியதில் ரூ.339 கோடி ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வினியோகஸ்தர் சஞ்சய் பண்டாரி வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்திய விமானப்படைக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ‘பிளாடஸ் ஏர்கிராப்ட்’ நிறுவனத்திடம் இருந்து 75 பயிற்சி விமானங்களை ரூ.2,895.63 கோடிக்கு வாங்குவதற்கு 2009-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பிளாடஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக சஞ்சய் பண்டாரி மற்றும் பிமல் சரீன் ஆகியோருக்கு சொந்தமான ‘ஆப்செட் இந்தியா சொலுஷன்ஸ்’ என்ற நிறுவனத்துடன் விதிமுறைகளை மீறி வினியோகஸ்தராக ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதற்காக சஞ்சய் பண்டாரியின் துபாய் மற்றும் இந்தியாவில் உள்ள அலுவலகங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பெறுவதற்காக ரூ.339 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும், இந்த பணம் இந்திய விமானப்படை மற்றும் ராணுவ அமைச்சகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. ஆயுத வினியோகஸ்தர் சஞ்சய் பண்டாரி, இந்தியா மற்றும் துபாயில் உள்ள அவரது நிறுவனங்கள், அகர்வால், வர்மா, பிமல் சரீன், அடையாளம் தெரியாத சில அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியதில் சஞ்சய் பண்டாரிக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.