காஷ்மீரில் 101 பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவம்
2019 ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 101 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த புள்ளி விபரத்தின் படி 2019 ம் ஆண்டில் மே 31 வரை 101 பயங்கரவாதிகள் வீழத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 23 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். 78 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள். இவைகள் அனைவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் அல் குவைதாவின் கிளை அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள். அதே சமயம் இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை மட்டும் 50 இளைஞர்கள் பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களில் சேர்ந்துள்ளனர்.
கடந்த 5 மாதங்களில் காஷ்மீரில் நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் அதிகபட்சமாக சோபியானில் 25 பயங்கரவாதிகளும், புல்வாமாவில் 15 பயங்கரவாதிகளும், அவந்திபுராவில் 14 பேரும், குல்காமில் 12 பேரும் வீழ்த்தப்பபட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரில் இருந்து தான் அதிக அளவிலான இளைஞர்கள் பயங்கரவாத குழுக்களில் சேர்க்கின்றனர். மேலும் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேருவதை தடுக்க பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பூஞ்ச், ரஜவுரி பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதால் இம்மாத இறுதியில் துவங்க உள்ள அமர்நாத் யாத்திரைக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரில் கொல்லப்படும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2014 ல் 53 ஆக இருந்த வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை, 2015 ல் 66 ஆகவும், 2016 ல் 88 ஆக அதிகரித்துள்ளது.