பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அமெரிக்கா கண்டிப்பு

பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியை அமெரிக்கா கண்டித்துள்ளது.

பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

இது உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கிடைத்துள்ள ஒரு வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த தருணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருகிற பாகிஸ்தானின் கொள்கையை மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்.

பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்களுடன் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு உள்ளது. அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம், நிலைமையை சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சரியான வி‌ஷயங்களை சொல்வதுடன், அந்த நாட்டில் சில மாற்றங்களை செய்ய முயற்சிக்கிறார் என்ற உண்மையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் அவர் அதில் வெற்றி பெறுவாரா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

அதே நேரத்தில், (பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக) பாகிஸ்தான் ராணுவ தளபதியும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரையில், பிரதமர் செல்கின்ற இலக்குக்கு ராணுவத்தின் ஆதரவை நாங்கள் பார்க்கிறோம்.

பாகிஸ்தான் சரியான வி‌ஷயத்தை சொல்கிறது. நாங்கள் எதிர்பார்க்கிற ஆரம்ப கட்ட நடவடிக்கையை எடுக்கிறது. அதற்காக அதை நாங்கள் பாராட்டுகிறோம். இருப்பினும், அவர்கள் உண்மையிலேயே சரியான நடவடிக்கையை எடுக்கிறார்களா என்பதை கண்டறியும் வரையில் அவர்கள் மீதான தீர்ப்பை நாங்கள் கூற முடியாத நிலையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.