மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவிப்பு

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இணைத்துள்ளது.
புல்வாமா தாக்குதலை அடுத்து , அந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பையும், அதன் தலைவர் மவுலானா மசூத் அசாரையும் சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்திய அரசு முயற்சி மேற்கொண்டது.
ஆனால் இதற்கு சீன அரசு முட்டுக்கட்டை போட்ட நிலையில், அந்த அரசுடனும் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதே நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை இந்தியாவுக்கு ஆதரவான நிலையை எடுத்து, சீனாவை வலியுறுத்தின.
இதனால் சர்வதேச அழுத்தம் அதிகரித்த நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க சீனாவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் , மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்து அறிவித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச அளவில் மசூத் அசாரின் இயக்கம் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதும், பாகிஸ்தானில் இருந்து இயக்கத்தை நடத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது.
மசூத் அசாரை கைது செய்து சிறையில் தள்ள வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு உருவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.