ராணுவத்திற்கு செலவழிக்கும் உலகின் 4-வது பெரிய நாடாக இந்தியா உயர்ந்துள்ளது

ராணுவத்திற்காக உலக நாடுகளின் செலவீனம் குறித்து ஆராய்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) , 2018-ம் ஆண்டிற்கான மதிப்பீட்டு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி பனிப்போருக்கு பின்னர் ராணுவத்திற்காக உலக நாடுகள் செலவிடும் தொகை தற்போது தான் உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் தங்கள் ராணுவத்திற்கு அதிக தொகையை செலவிடத்தொடங்கியதன் எதிரொலியாக இந்த உயர்வு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் உலக நாடுகள் ராணுவத்திற்காக செலவிடும் தொகை 2.6 சத்வீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம்  வெளியிட்டுள்ள பட்டியலின்படி முதல் இடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. உலக நாடுகளின் ராணுவ செலவினத்தில் 36 சதவீதம்  அமெரிக்கா மட்டுமே செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. தொடர்ச்சியாக 24-வது ஆண்டாக அந்நாடு ராணுவத்திற்காக செலவிடும் தொகையை அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. உலக செலவீனத்தில் சீனாவின் பங்கு 13.72 சதவீதம் ஆகும் 3-வது இடத்தில் சவுதி அரேபியா (3.71 சதவீதம் ) உள்ளது.
கடந்த முறை 5-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த முறை 4-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. தனது ராணுவ வலிமையை அதிகரிக்கும் பொருட்டு புதிய போர் விமானங்கள், போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கி துப்பாக்கிகள், காலாட்படை ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களில் இந்தியா தனது முதலீட்டை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. உலக செலவீனத்தில் இந்தியாவின் பங்கு 3.1 சதவீதமாக  உள்ளது.

5-வது இடத்தில் பிரான்ஸ், 6-வது இடத்தில் ரஷ்யா, 7-வது இடத்தில் பிரிட்டன், 8-வது இடத்தில் ஜெர்மனி, 9-வது இடத்தில் ஜப்பான் மற்றும் 10-வது இடத்தில் தென் கொரியா போன்ற நாடுகள் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இப்பட்டியலில் 20-வது இடம் வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.