2016ல் புர்ஹான் வானி.. 2019ல் சாகிர் முசா…!

2016ல் தீவிரவாதி புர்ஹான் வானி வீழ்த்தப்பட்ட போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட சலசலப்பை போல சமீபத்தில் பாதுகாப்புப் படையினரால் வீழ்த்தப்பட்ட சாகிர் முசாவின் மறைவு சலசலப்பு தோன்றி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முசா 19 வயதிலேயே தீவிரவாதியாக உருவெடுத்தது அல்-கொய்தா துணை அமைப்பை இந்தியாவில் முதல் முறையாக தோற்றுவித்தது எப்படி?

காஷ்மீரில் வீழ்த்தப்பட்ட புர்ஹான் வானியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது அதே பாணியில் பிரபல தீவிராவாதியாக உருவெடுத்திருந்த சாகிர் முசா பாதுகாப்புப் படையினரால் கடந்த 23ம் தேதி கொல்லப்பட்டார். இருவரும் டிரால் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், நெருக்கமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பில் இருந்த சாகிர் முசா, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பினை முதல் முதலாக இந்தியாவில் தோற்றுவித்தவன் ஆவார்.

இந்நிலையில் தீவிரவாத நடவடிக்கை எதிர்ப்பு படையினரால் தேடப்பட்டு வந்த சாகிர் முசா தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள நூர்பாரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது சுமார் இரண்டரை மணி நேர துப்பாக்கிச் சண்டைக்கு பின்னர் கொல்லப்பட்டார்.

நேற்றைய தினம் முசாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். 2016ல் புர்ஹான் வானி கொல்லப்பட்ட பின்னர் 4 மாத காலம் பாதுகாப்புப் படையினருக்கும் பகுதி மக்களுக்குமிடையே ஏற்பட்ட கல்வீச்சு சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டனர். அதுபோன்ற அசம்பாவித சம்பவத்தை தவிர்க்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவைகளும் முடக்கப்பட்டன.

இருப்பினும் சிறிய அளவிலான கல்வீச்சு சம்பவங்கள் அங்கொன்றுமாக இங்கொன்றுமான நடைபெற்று வருகின்றன.

முசா என்கவுண்டர் குறித்து காவல்துறை செய்தித்தொடர்பாளர் மனோஜ் குமார் கூறுகையில், தெற்கு காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது, 6 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்த சாகிர் முசா, ஏகப்பட்ட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான். அவனை என்கவுண்டர் செய்த போது ராக்கெட் லாஞ்சர்கள், ஜெலட்டின் குச்சிகள், கையெறி குண்டு வீச்சு சாதனங்கள், வெடிமருந்துகள் என போர் தளவாடங்கள் போன்ற அறை இருந்தது என்றார்.

2018 ஜலந்தர் தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக பஞ்சாபின் மொகாலியில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை நீதிமன்றம் சாகிர் முசாவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.