உத்தரபிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் திட்டம்?!

உத்தரபிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாமிளி மற்றும் ரூர்கி ரயில்நிலையங்களுக்கு இரண்டு மர்ம கடிதங்கள் வந்துள்ளன.

இதில் உத்தரபிரதேசத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், ரயில்நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கமாண்டரிடம் இருந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் உள்ள விஷ்வநாத் கோயில், ராமர் கோயில் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை கொல்லவும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து உத்தரபிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களான டெல்லி, ஹரியானாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தானில் தலைமறைவாகவுள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், முக்கிய தீவிரவாதிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. மசூத் அசார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. ஆனால், மசூத் அசார் உடல் நலத்துடன் இருப்பதாகவும், கடந்த 17 ஆண்டுகளாக மருத்துவமனைக்கே சென்றதில்லை அவரே கூறியதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பாகிஸ்தான் அரசு, மசூத் அசாரின் உடல்நலம் குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.