தன் உயிரை மாய்த்து இந்தியாவின் விக்ரமாதித்யாவைக் காப்பாற்றிய அதிகாரி!

தன் உயிரை மாய்த்து இந்தியாவின் விக்ரமாதித்யாவைக் காப்பாற்றிய அதிகாரி!

இந்தியாவிடம் தற்போது ஒரே ஒரு விமானம் தாங்கிக் கப்பல்தான் உள்ளது. ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட அந்தக் கப்பலின் பெயர் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா. ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இந்தக் கப்பல் ரஷ்யாவிடமிருந்து புனரமைக்கப்பட்டு வாங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் கார்வாரைத் தளமாகக் கொண்டு ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா இயங்கி வருகிறது

இந்நிலையில், இன்று கார்வார் துறைமுகத்துக்குள் நுழையும் சமயத்தில் ஐ.என்-எஸ் விக்ரமாதித்யாவின் அடிப்பகுதியில் திடீரென்று தீப் பிடித்தது. தீப்பிடித்த பகுதியில் நுழைந்து துணிவுடன் தீயை அணைக்கும் முயற்சியில் லெப்டினன்ட் கமாண்டர்  டி.எஸ்.சவுகான் ஈடுபட்டார். தீயை அணைத்த நிலையில் புகைமூட்டம் காரணமாக மயங்கி விழுந்தார். உடனடியாக, கார்வார் கடற்படை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சவுகான் மரணமடைந்தார். இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாகவும் தீப்பிடித்தற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளது.

ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா 284 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் 20 மாடி உயரம் கொண்ட பிரமாண்ட கப்பல் ஆகும். 40,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல்தான் இந்திய கடற்படையில் மிகப் பெரியது. தக்க சமயத்தில் துரிதமாகச் செயல்பட்டு டி.எஸ்.சவுகான் தீயை அணைத்ததால், இந்தியாவின் ஒரே விமானம்தாங்கிக் கப்பல் காப்பாற்றப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.