துணை ராணுவ படையினரை கண்ணி வெடிகளிலிருந்து பாதுகாக்க நவீன வாகனங்கள் கொள்முதல்: மத்திய அரசு முடிவு

துணை ராணுவ படையினரை கண்ணி வெடிகள் போன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்காக நவீன வாகனங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பணியாற்றும் துணை ராணுவ படையினருக்கும் புதிய வாகனங்கள் வாங்க ரூ.613.84 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இந்த நிதியில் கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனங்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் இந்த நவீன வாகனத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் பயணிக்கலாம். அதேபோல், என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய கமாண்டோ படையினருக்கு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஏழு வாகனங்களை வாங்க ரூ.16.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம், கட்டடத்துக்குள்ளும், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ள முடியும். மேலும், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து அதை அழிக்க, கமாண்டோ படையினருக்கு இந்த வாகனம் மிகவும் உதவியாக இருக்கும். மாடி அல்லது சரிவு பாதையில் இந்த வாகனங்கள் பயணிக்க முடியும். இந்த வாகனத்தில் நிகழ்நேர பார்வை அமைப்புடன் கூடிய எக்ஸ்ரே உட்பட பல நவீன வசதிகள் உள்ளடங்கியிருக்கும் என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.