விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது – இந்திய விமானப்படை பரிந்துரை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பணிபுரிந்து வந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானால் திரும்பி ஒப்படைக்கப்பட்டதும் நாடு திரும்பிய அபிநந்தன், நான்கு வார விடுப்பில் சென்றார். பின்னர் ஸ்ரீநகரில் முன்பு பணிபுரிந்த படைப்பிரிவில் கடந்த மாதம் இணைந்தார். இந்நிலையில் ஸ்ரீநகரில் அவர் பணிபுரிந்த படைப்பிரிவில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய விமானப்படை வட்டாரத் தகவல்கள் கூறுவதாக அச்செய்தி கூறுகிறது.
தற்போது அவர் விமானப்படையின் மேற்குப்பகுதி படைப்பிரிவில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இது வழக்கமான பணியிட மாற்றம்தான்.
போர் காலத்தில் வழங்கப்படும் வீர தீர செயல்களுக்கான வீர் சக்ரா விருதுக்கு, அபிநந்தனின் பெயரை பரிந்துரை செய்யவும் விமானப்படை முடிவு செய்துள்ளது.
வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா ஆகிய விருதுகளுக்குப் பிறகு மூன்றாவது மிகப்பெரிய விருது இதுவாகும் என்று அந்தத் தகவல்கள் குறிப்பிட்டன.
புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் முயன்றன. அந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது நடுவானில் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை அபிநந்தன் வர்த்தமான் சுட்டுவீழ்த்தினார். அதேபோல், அவர் சென்ற போர் விமானமும் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் தப்பிய அபிநந்தன், பாகிஸ்தான் பகுதிக்குள் பாராசூட் மூலம் தவறுதலாக சென்றார். எனினும், பாகிஸ்தானால் பத்திரமாக அவர் விடுவிக்கப்பட்டார் என மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.