பாகிஸ்தான் இந்திய சுகோய் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறுவது பொய்

பாகிஸ்தான் வான் பரப்பில் தாக்குதல் தொடுத்த இந்திய போர் விமானங்களில் சுகோய் 30 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளதை இந்திய விமானப் படை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய விமானப் படையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் சுகோய் 30 விமானத்தை சுடவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி பாகிஸ்தானின் பால்கோட்டில் தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய போர் விமானங்கள் அனைத்தும் பத்திரமாக திரும்பி வந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை நோக்கி செலுத்திய எப்.16 போர் விமானத்தை இழந்து விட்ட பாகிஸ்தான், தனது தோல்வியை மறைக்கவே பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் இந்திய விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவ தரைப்படைகளைத் தாக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் விமானப் படை விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய போது, சுகோய், மிராஜ், பைசன் ஆகிய இந்திய விமானப்படை விமானங்கள் அவற்றை விரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் விமானப்படை தனது விமானங்களை பின்வாங்க செய்தது என்றும் அவை வீசிய பெரிய குண்டுகளும் இலக்கை தவறி விழுந்தன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்ராம் ஏவுகணையுடன் இந்திய ராணுவ நிலைகளைத் தாக்க வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானம் குறி தவறாமல் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதன் ஏவுகணை முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். உடைந்த ஏவுகணையின் பாகங்கள் தான் காஷ்மீரின் ரஜோரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Polimer

Leave a Reply

Your email address will not be published.