அபிநந்தனின் வீரத்தால் நாடே பெருமை கொள்கிறது – தலைவர்கள் வாழ்த்து

அபிநந்தனின் வீரத்தால் நாடே பெருமை கொள்கிறது என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Abhinandan #Return

கடந்த மாதம் 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.

விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அபிநந்தனை அட்டாரி-வாகா எல்லையில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தன. ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் இருந்த அபிநந்தன் லாகூர் வரை விமானத்தில் அழைத்து வரப்பட்டார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இந்திய ராணுவ வீரர்கள் சூழ மிடுக்கான நடையுடன் இந்திய எல்லைக்குள் அடியெடுத்து வைத்தார் அபிநந்தன்.

இந்நிலையில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “விமானப்படை வீரர் அபிநந்தனின் வீரத்தால் நாடே பெருமை கொள்கிறது. நம் நாட்டின் ராணுவம் 130 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில், “விமானப்படை வீரர் அபிநந்தன் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். ஆபத்து நேர்ந்தபோதும் நீங்கள் அமைதியை வெளிப்படுத்தியது பாராட்டத்தக்கது” என பதிவிட்டுள்ளார்.

விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில், “அபிநந்தனின் கண்ணியம், வீரம் நம் எல்லோரையும் பெருமைபட வைத்துள்ளது. அபிநந்தன் நாடு திரும்பியதை மிகுந்த அன்புடன் வரவேற்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

விங் கமாண்டர் அபிநந்தன் வருகை குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர், “அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்தது வரவேற்புக்குரியது. இரு நாடுகளும் மீண்டும் அமைதிக்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.