பாலகோட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது: விமானப் படை தளபதி பேட்டி

பாலகோட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விமானப் படையால் கணக்கிட முடியாது என்று அதன் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் குடியரசு தலைவரின் கலர்ஸ் பிரசன்டேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா, விமானத்துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.எஸ்.தனோவா, ”பாலகோட் பயங்கரவாத முகாம்களில் எவ்வளவு பேர் இருந்தனர், அதில் எத்தனை பேர் இறந்தனர் என்று விமானப் படையால் உறுதியாகக் கணக்கிட முடியாது. அரசே அதைத் தெளிவுபடுத்தும். நாங்கள் உயிர்களின் இறப்பைக் கணக்கிடவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தோமோ இல்லையா என்றுதான் பார்த்தோம்.

நாம் எதிரிகளின் இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதால்தான், அவர்கள் மீண்டும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். காடுகளில் நாம் குண்டுகளைப் போட்டிருந்தால், ஏன் பாகிஸ்தான் பிரதமர் இதுகுறித்துப் பேசப் போகிறார்?

மிக் ரக 21 வகை விமானங்கள் பழைய விமானங்கள் அல்ல; அவற்றை நவீனப்படுத்தி உள்ளோம். அதில் தரமான ராடார் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை வசதிகளும் போதுமான ஆயுதங்களை சேமிக்கும் வசதிகளும் மிக் – 21 விமானத்தில் உள்ளன.

செப்டம்பர் மாதம், ரஃபேல் விமானங்கள் அனைத்தும் விமானப் படையில் சேர்க்கப்படும். விங் கமாண்டர் அபிநந்தனின் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே பணியில் மீண்டும் சேர்க்கப்படுவார். அது அவரின் கையில்தான் இருக்கிறது. அவருக்கு என்ன சிகிச்சை தேவைப்படுகிறதோ, அது உரிய முறையில் அளிக்கப்படும். அவரின் உடல் தகுதி சரிபார்க்கப்பட்ட பின், அவர் போர் விமானத்தைக் கையாளுவார்” என்றார் தனோவா.

The hindu

Leave a Reply

Your email address will not be published.