ஜெய்பூரில் இந்திய ராணுவம் குறித்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீப் ஓட்டுநரான நவாப் கான் (வயது 36) என்பவர் பாகிஸ்தான் எல்லையோரப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்பட்டதால் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்திய பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சாம் பகுதியைச் சேர்ந்த நவாப் கான் கைது செய்யப்பட்டது குறித்து உளவுத்துறை கூடுதல் இயக்குனர் உமேஷ் மிஸ்ரா கூறும்போது, ஜீப் ஓட்டுநராக பணியாற்றிவந்த நவாப் கான் இந்திய ராணுவம் குறித்த உளவுத்தகவல்களை பாகிஸ்தானுக்கு வாட்ஸ் அப் வாயிலாக பகிர்ந்து கொண்டு அதற்கு ஈடாக பணம் பெற்று வந்துள்ளார்.
உளவு தகவல்களை ரகசிய சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள, நவாப் கான் கடந்த ஆண்டு பாகிஸ்தான் சென்ற போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பிற்கு உளவாளியாக செயல்பட்ட ஒருவருடன் பழக்கம் கிடைத்துள்ளது.
எப்படி உளவு பார்ப்பது என்பது குறித்து பாகிஸ்தான் உளவாளி கானுக்கு பயிற்சியளித்து, இந்திய ராணுவம் குறித்த தகவல்களை திரட்டி அனுப்புமாறு அவருக்கு கட்டளையிட்டு இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கூட்டுக்குழு கைது செய்யப்பட்டுள்ள நவாப் கானிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறது.