இந்திய நீர்மூழ்கி கப்பலின் ஊடுருவும் முயற்சி முறியடிப்பு -பாகிஸ்தான் கப்பற்படை

எங்களது கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பலின் முயற்சியை முறியடித்து விட்டோம் என பாகிஸ்தான் கப்பற்படை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கப்பற்படை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், எங்கள் கடல் எல்லைக்குள் இந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்று நுழைய முயன்றது. இதனை பாகிஸ்தான் கப்பற்படை தனித்திறனுடன் முறியடித்து விட்டது என தெரிவித்துள்ளது.

இதனுடன் நேற்று இரவு 8.35 மணியளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. இதனை உண்மையான புகைப்படம் என்று தெரிவித்து உள்ளது.

இந்திய நீர்மூழ்கி கப்பலானது எங்களால் தாக்கப்படவில்லை. ஏனெனில் அமைதி கொள்கையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். இந்த சம்பவத்தில் இருந்து அமைதியை நோக்கி செல்ல வேண்டும் என்ற விசயத்தினை இந்தியா கற்று கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கப்பற்படை எப்பொழுதும் தனது கடல் எல்லை பகுதிகளை பாதுகாக்க தயாராக உள்ளது. எந்தவித அத்துமீறலையும் முழு வலிமையுடன் எதிர்கொள்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வெற்றிகரமுடன் முறியடித்தோம். இது 2-வது முறை நடந்த முயற்சி. இதனையும் முறியடித்து உள்ளோம் என தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர். இதனை தொடர்ந்து கடந்த 26ந்தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. இதில் தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர், தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து கடந்த 27-ந்தேதி காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன. ஆனால் இந்த நடவடிக்கையின்போது எதிர்பாராதவகையில் ‘மிக்-21’ ரக போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.

அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் சிறை பிடித்தது. அவரை, ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய தரப்பில் நெருக்கடி அளிக்கப்பட்டது. இதன்பின் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.