செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார்.
“மிஷன் சக்தி” என்று அழைக்கப்படும் இது பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
1.இது என்ன சோதனை?
- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவிலுள்ள ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள் எதிர்ப்பு சோதனையான “மிஷன் சக்தி”-யை இந்தியா 2019ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி நடத்தியது.
பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) இந்த தொழில்நுட்ப மிஷனை நடத்தியது.
இந்தியா ‘லோ எர்த் ஆர்பிட் சேட்டிலைட்’ எனப்படும் தாழ்வான உயரத்தில் பறக்கும் செயற்கைக்கோள் இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பூமியின் மேல் பரப்புக்கு மேல் 400 முதல் 1000 மைல் தொலைவில் வட்டமிடும் செயற்கைக்கோள்கள் ‘லோ எர்த் ஆர்பிட்ஸ்’ எனப்படும்.
இந்த சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. திட்டப்படி எல்லா நோக்கங்களும் இதன் மூலம் நிறைவேறியுள்ளது.
மிக சிறந்த துல்லியமும், தொழில்நுட்ப திறனும் இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதால், முற்றிலும் உள்நாட்டிலேயே செய்யப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்வெளியிலுள்ள ஒரு செயற்கைக்கோளை இடைமறித்து அழிக்கும் திறனை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.
- இந்த சோதனை மூலம், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது
2. பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் எது?
இந்திய செயற்கைக்கோள் ஒன்று இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
3. எந்த ஏவுகணை/இடைமறிப்பு கலன் இதற்கு பயன்படுத்தப்பட்டது?
செயல்பட்டு வரும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு இடைமறிப்பு கலன் இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.
4. செயற்கைக்கோள் எதிர்ப்பு தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்துவதற்கு “சோதனைகள் மூலம் பறப்பது” மற்றும் ஜாம்மிங் போன்ற பிற வழிகள் உள்ளன. இந்த இயக்கத்தை அழிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா ஏன் பயன்படுத்தியது?
இது இந்தியா வடிவமைத்துள்ள தொழில்நுட்பம். விண்வெளி தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இந்த நடவடிக்கையில் நோக்கங்களை அடைவதற்கு பொருத்தமான தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்தியுள்ளது.
5. இந்த சோதனை விண்வெளி குப்பைகளை உருவாக்கியுள்ளதா?
விண்வெளி குப்பை தோன்றிவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய தாழ்வான வளிமண்டலத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் உருவாகும் குப்பை அனைத்தும் சில வாரங்களில் பூமியை வந்தடையும்.
6. எதற்காக இந்த சோதனை?
- இந்தியா நீண்டகால மற்றும் விரைவாக வளரும் விண்வெளி திட்டத்தை கொண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இது பெரிதும் விரிவடைந்துள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் மிஷன் வெற்றிகரமாக தொடங்கியது. அதற்கு பின்னர் விண்வெளிக்கு இந்தியர்களை கொண்டு செல்லும் “ககன்யான் திட்டம்‘ அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது
- அறிவியல் ஆய்வு மற்றும் ஆய்வுப்பயணத்திற்கும், கல்விக்கும், பிற சிறிய செயற்கைக்கோள்களுக்கு அப்பாற்பட்டு, தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு, பரிசோதனை, புவியில் இடம்காட்டும் செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய 102 விண்வெளி நடவடிக்கைகளை இந்தியா நடத்தியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக உள்கட்டுமானத்தின் முக்கிய முதுகெலும்பாக இந்தியாவின் விண்வெளி திட்டம் விளங்குகிறது.
- விண்வெளியிலுள்ள நமது செல்வங்களை பாதுகாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதை சரிபார்க்க இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. விண்வெளியிலுள்ள இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது,
7. இந்த சோதனை இப்போது நடத்தப்பட்டது ஏன்?
இந்த சோதனை வெற்றியடையும் என்பதற்கான போதிய அளவிலான நம்பிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர். இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பை மேம்படுத்தும் அரசின் நோக்கத்தையும் இது பிரதிபலிக்கிறது. 2014ம் ஆண்டு தொடங்கி விண்வெளி வளர்ச்சி திட்டம் விரைவான வளர்ச்சியை கண்டுள்ளது.
8. விண்வெளியில் ஆயுதப் போட்டியில் இந்தியா நுழைகிறதா?
- விண்வெளியில் ஆயுதப் போட்டியில் நுழையும் நோக்கம் இந்தியாவிடம் இல்லை. விண்வெளியை அமைதி நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை இந்தியா தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
விண்வெளியை ஆயுதமயமாக்குவதற்கு இந்தியா எதிராக இருப்பதோடு, விண்வெளி அடிப்படையிலான செல்வங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குகிறது.
- விண்வெளி மனிதகுலத்திற்கு பொதுவானது என இந்தியா கருதுகிறது. விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது என மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்களால் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் பாதுகாத்து, வளர செய்வது இந்த செயற்கைக்கோள் அழிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள நாடுகளின் பொறுப்பாகும்.
- விண்வெளி தொடர்பான முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா உள்ளது. விண்வெளி பொருட்களை ஐநா பதிவேட்டில் பதிவிடுதல், ஏவுகணை செலுத்துவதற்கு முன்னால் தகவல் அளித்தல், ஐநா விண்வெளி மட்டுபடுத்தல் வழிகாட்டுதலுக்கு இணக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், விண்வெளியில் உருவாகும் குப்பைகளை மேலாண்மை செய்கின்ற விண்வெளி குப்பைகள் ஒத்துழைப்பு முகமைகளின் செயல்பாடுகளில் பங்கேற்பு, விண்வெளி பொருள் அருகாமை விழிப்புணர்வு மற்றும் மோதல் தவிர்த்தல் பகுப்பாய்வு, ஆசிய மற்றும் பசிபிக்கில் விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்விக்கு ஐ.நா-வுடனான மையத்தோடு தொடர்பு உள்பட பல சர்வதேச ஒத்துழைப்பு செயல்பாடுகளால் வெளிப்படைதன்மையை உருவாக்குகின்ற பல நடவடிக்கைகளை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
- விண்வெளியில் முதலாவதாக ஆயுதங்களை செலுத்துவதில்லை என்கிற 69/32 யுஎன்ஜிஏ தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது. இந்த தீர்மானத்தை ஓர் இடைக்கால படியாகவே இந்தியா பார்க்கிறது. விண்வெளியில் சர்வதேச சமூகத்திற்கு ஒரு முன்னுரிமை இருக்க வேண்டும் என்பதில், விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடுக்கும் வகையிலான சட்டபூர்வமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு மாற்றாக இதனை பார்க்கவில்லை.
- 1982ம் ஆண்டு தொடங்கி ஆயுத ஒழிப்பு மாநாட்டில் விவாத பொருளாக இருக்கும், விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடுக்கின்ற பிரச்சினை தொடர்பான கருத்தை இந்தியா ஆதரிக்கிறது.
-
9. விண்வெளியில் ஆயுதங்கள் பற்றிய சர்வதேச சட்டம் என்ன?
- 1967 விண்வெளி ஒப்பந்தம்தான் முதன்மையான சர்வதேச ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்த்த்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியா, 1982ம் ஆண்டு இதனை உறுதிப்படுத்தியது.
விண்வெளி ஒப்பந்தம் பெருமளவிலான மக்களை அழிக்கின்ற ஆயுதங்களை தடை செய்கிறது. சாதாரண ஆயுதங்களை அல்ல.- நிரூபிக்கப்பட்ட விண்வெளி தொழில்நுட்பத்தோடு, செயற்கைக்கோளை அழிக்கின்ற முக்கிய நாடாக இருக்கின்ற திறனோடு, விண்வெளியில், ஆயுதங்களை செலுத்துவதை தடை செய்வது உள்பட விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடுப்பதற்கு எதிர்காலத்தில் சர்வதேச சட்ட வரைவை கொண்டு வருவதில் பங்களிப்பதை இந்திய எதிர்பார்க்கிறது.
- உறுப்பு நாடாக அல்லது தேசிய கடமையாக இருக்கின்ற எந்தவொரு சர்வதேச சட்டம் அல்லது ஒப்பந்த்த்தையும் இந்தியா மீறவில்லை.
-
10. இந்த சோதனை எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதா?
- இந்த சோதனை எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல. இந்தியாவின் விண்வெளி திறன்கள் எந்தவொரு நாட்டையும் அச்சுறுத்தவில்லை. யாருக்கும் எதிரானதும் அல்ல.
- அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதி செய்வதிலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருப்பதிலும் இந்தியா முனைப்போடு உள்ளது.
தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகளின் வகைகள் மற்றும் எண்ணிக்கை அதிகரிப்பினால் விண்வெளியின் அடிப்படையான செல்வங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்துகின்ற நம்பகத்தன்மையை இந்தியாவின் இந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை திறன் சாதித்துள்ளது,