மசூத் அசாருக்கு சிறுநீரக கோளாறு: பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை

ஜெய்ஷ்-இ- முகமது தீவரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையிலேயே சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.  அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்தது. சர்வதேச நாடுகளில் நெருக்கடி, மத்திய அரசின் நடவடிக்கைகளால் அபிநந்தனை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது.

இந்தியா – பாகிஸதான் இடையே தற்போது பதற்றம் ஏற்படுவதற்கு காரணம் ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பு. அதன் தலைவர் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை. அதேசமயம், அவர் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மசூத் அசார் பாகிஸ்தானி்ல் தான் இருக்கிறார். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. அதேசமயம் புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா தரப்பில் உறுதியான ஆதரங்களை தந்தால், அது பாகிஸ்தான் நீதிமன்றம் ஏற்கும் வகையில் இருந்தால் நாங்கள் மக்களை சமாதானம் செய்ய முடியும்’’ என்றார்.

இந்தநிலையில், மசூத் அசார் பற்றி பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அடிக்கடி டயாலிசிஸ் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராவல் பிண்டி நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெய்ஷ் – இ-முகமது அமைப்புக்கு தேவையான உதவிகளை பாகிஸ்தான் ராணுவம் செய்து வருவதாக புகார் உள்ள நிலையில் தீவிரவாதி மசூத் அசாருக்கு நேரடியாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The hindu

Leave a Reply

Your email address will not be published.