டெல்லியில் அபிநந்தனுடன் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்திப்பு

டெல்லியில் விமானப்படை வீரர் அபிநந்தனை, பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக கடந்த மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது அபிநந்தன் என்ற விமானி ஓட்டிய மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

இதில் விமானத்திலிருந்து பாதுகாப்பாக பாராசூட் மூலம் வெளியே பறந்த அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அதன் பின் சர்வதேச அழுத்தங்கள், இந்தியாவின் நெருக்கடிகள் ஆகியவற்றால், அபிநந்தன் இரண்டரை நாட்களுக்குப் பின் நேற்று அடாரி வாகா எல்லைப் பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

மாலை 4 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு 9.20 மணிக்குதான் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், விங் கமாண்டர் அபிநந்தன் இன்று காலை இந்திய விமானப்படை தலைமை அதிகாரி பி.எஸ்.தனோவாவை சந்தித்து பாகிஸ்தான் வசம் காவலில் இருந்த போது என்ன நடந்தது என்பது குறித்து விவரித்தார்.

இதனையடுத்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விமானப்படை வீரர் அபிநந்தனை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published.