வாகா எல்லை வந்தடைந்தார் விமானப்படை வீரர் அபிநந்தன்

பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா எல்லை வந்தடைந்தார்.

இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இந்திய அரசும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது. நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.

இந்நிலையில், விமானப்படை வீரர் அபிநந்தனை அழைத்துவருவதற்கான உரிய நடவடிக்கைகளை இந்திய தூதர் மேற்கொண்டார். பின்னர், பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்து லாகூருக்கு அபிநந்தன் கொண்டு வரப்பட்டார். இதனிடையே, அபிநந்தனை லாகூரிலிருந்து வாகாவிற்கு தனி விமானத்தில் கொண்டுவரக் கோரிய இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது.

இதற்கிடையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் அபிநந்தனை விடுவிக்கக்கூடாது எனத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், சாலை மார்க்கமாக வாகா எல்லையை நோக்கி அவர் கொண்டு வரப்பட்டார். மாலை 4 மணியளவில் அபிநந்தன் வாகா எல்லை வந்தாடைந்தார்.

அபிநந்தனை அட்டாரி எல்லையிலிருந்து வரவேற்க இந்திய விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். இருப்பினும், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் வீரர் அபிநந்தனை ஒப்படைப்பதற்கான எழுத்துபூர்வ நடைமுறைகளுக்கு ஒரு மணி நேரம் ஆகும். அதாவது இந்த நடைமுறைகள் முடிவடைய மாலை 5 மணி ஆகும் என்று கூறப்படுகிறது. 

இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்ட பின்னர் அவருக்கு முதலில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். பின்னர், இந்திய அதிகாரிகள் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவார்கள். அபிநந்தனை வரவேற்க ஏராளமான மக்கள் வாகா எல்லையில் குவிந்துள்ளனர். அவரது பெற்றோரும் அங்கு காத்திருக்கின்றனர். சென்னையிலிருந்து டெல்லி சென்ற அபிநந்தன் பெற்றோருக்கு விமானத்தில் சக பயணிகள் கைதட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.