திருமணமான 4 நாளில் பணிக்கு திரும்பிய கர்நாடக ராணுவ வீரர் : வீர திலகமிட்டு மனைவி-தாய் வழியனுப்பினர்

ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதால் திருமணமான 4 நாளில் கர்நாடக விமானப்படை வீரர் பணிக்கு திரும்பினார். அவருக்கு வீர திலகமிட்டு அவருடைய மனைவி-தாய் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் மலிகாவாட் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து ஏராளமானவர்கள் ராணுவம் உள்பட இந்திய பாதுகாப்பு படைகளில் பணி செய்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் சுதார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சுனிதா. இந்த தம்பதியின் மகன் ராஜேந்திர சுதார். இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்குக்கும் மாதூரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் திருமணம் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால். திருமணத்துக்கு ராஜேந்திர சுதார், ஒரு மாதம் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து கடந்த மாதம் 24-ந் தேதி ராஜேந்திர சுதார்-மாதூரி ஆகியோரின் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதால் உடனடியாக பணிக்கு திரும்பும்படி விமானப்படை அவருக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, உடனடியாக ராஜேந்திர சுதார் பணிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக, ராஜேந்திர சுதாருக்கு அவருடைய மனைவி மாதூரி, தாய் சுனிதா ஆகியோர் ஆரத்தி எடுத்து நெற்றியில் வீர திலகமிட்டு வழியனுப்பினர்.
இதுபற்றி ராஜேந்திர சுதாரின் தந்தை ஸ்ரீகாந்த் சுதார் கூறுகையில், ‘நான் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தாய்நாட்டை காப்பது தான் முதல் கடமையாகும். எனது மகனை அதற்காக அனுப்பி வைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்றார்.

தாய் சுனிதா கூறுகையில், ‘எனது கணவர் 28 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். இதனால் நாட்டுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும். எனது மகன் திருமணம் ஆன சில நாட்களிலேயே நாட்டை பாதுகாக்கும் பணிக்காக செல்வது எனக்கு பெருமையாக இருக்கிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.