அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி அபிநந்தன்

அமெரிக்காவின் தயாரிப்பான எப்-16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி, மற்றும் உலகிலேயே முதல் வீரர் எனும் பெருமையை அபிநந்தன் வர்த்தமான் பெற்றுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை குண்டுவீசி அழித்துவிட்டு கடந்த மாதம் 26-ம் தேதி திரும்பியது. இதையடுத்து, இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. அமெரிக்கா அளித்த எப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தி இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் விமானப்படை நுழைந்தன.

இந்த எப்-16 ரக விமானங்களைத் தீவிரவாதிகளை அழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், இந்த விமானத்தை இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆதாரங்களை திரட்டி விசாரணையும் அமெரிக்க நடத்த உள்ளது.

இந்த பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பைஸன் ரக போர் விமானத்தின் மூலம் விரட்டிச் சென்றார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜவுரி வான் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை அபிநந்தன் இடைமறித்தார்.

அப்போது அந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில்  இருந்து திரும்பியபோது அந்நாட்டு விமானப்படையினர் அபிநந்தன் விமானத்தைச் சுட்டனர். இதில் அவர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். ஏற்குறைய 60 மணிநேரத்துக்கும் மேலாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து அதன்பின் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

அபிநந்தன் சுட்டு வீழ்த்திய எப்-16 விமானம் குறித்து விமானப்படை முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பாகிஸ்தான்  விமானப்படையின் எஃப்- 16 விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியது பெரும் வியப்புக்குள்ளாக்கியது. ஏனென்றால், அமெரிக்கத் தயாரிப்பான எப்-16 ரக போர் விமானம் அதி நவீன தொழில்நுட்பம் கொண்டது. இந்தியாவின் மிக்-21 விமானத்தைக் காட்டிலும் அதிகமான வசதிகள், நவீன தொழில்நுட்பங்கள் கொண்டது.  இதுவரை அந்த விமானத்தை யாரும் சுட்டு வீழ்த்தியது இல்லை.

ஆனால், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷிய தயாரிப்பான மிக்-21 பைஸன் ரக விமானத்தின் மூலம் எப்-16 ரக விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதுதான் ஆச்சர்யமானது . இதன்மூலம் எஃப்-16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்கு அபிநந்தன், வியம்பல் ஆர்-73 எனும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஏவுகணையைப் பயன்படுத்தும் முன் கடைசியாக ஆர்-73 எனும் செய்தியை விமானப்படை கட்டுப்பாட்டு அறைக்கு அபிநந்தன் தகவல் அனுப்பியுள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தனர்.

இந்த தகவலை ஆங்கில நாளேடு ஒன்றுக்கு முன்னாள் விமானப்படை மார்ஷல்  ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன் அவரிடம் இருந்த ஆவணங்கள், பொருட்கள் அனைத்தையும் அளித்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியை மட்டும் தர மறுத்துவிட்டனர் எனக் கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published.