இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் செயல்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஈடுபட வேண்டும்; சீனா

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் செயல்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஈடுபட வேண்டும் என சீனா கூறியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கடந்த 14ந்தேதி சென்று கொண்டிருந்த துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கு உலக நாடுகள் பல கண்டனங்களை தெரிவித்துள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்கி அழித்தது.

இதுபற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி லு காங், தாக்குதல் பற்றிய தகவல்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். தெற்காசிய பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் முக்கியத்துவம் பெற்ற நாடுகள் என நான் கூற விரும்புகிறேன்.

இரு நாடுகளுக்கு இடையே ஒரு பலம் வாய்ந்த நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திர தன்மை ஏற்பட வழிவகுக்கும்.

இரு நாடுகளும் கட்டுப்பாட்டினை கடைப்பிடித்து, தங்களது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக கூடுதலாக செயலாற்றுவார்கள் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.