காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று முன்தினம் இந்திய தரப்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் தீவிரவாத பயிற்சி பெறுவோர், தளபதிகள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமான படையினர் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிருஷ்ண காடி பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இன்று காலை 6 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பில் இருந்தும் துப்பாக்கி சூடு நடத்தி பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சூடு காலை 7 மணியளவில் நிறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.