பசு கடத்தல் கும்பலை துரத்தி சென்று ஆற்றில் குதித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்
வங்காளதேசத்திற்கு பசுக்களை கடத்திய கும்பலை துரத்தி சென்று ஆற்றில் குதித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இந்திய மற்றும் வங்காளதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பசுக்களை கடத்தி வங்காளதேசத்திற்கு கொண்டு சென்ற கடத்தல்காரர்கள் சிலரை அவர்கள் கவனித்தனர். அதன்பின் கடத்தல் கும்பலை நிற்கும்படி வீரர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கடத்தல் கும்பல் சென்றது. அவர்கள் தடிகள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்துள்ளனர். இதனால் அவர்களை பிடிக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதில் தேபஷிஸ் ராய் என்ற கான்ஸ்டபிள் கடத்தல்காரர்களை விரட்டி சென்றுள்ளார்.
கடத்தல்காரர்கள் தொடர்ந்து ஓடி பத்மா ஆற்றில் குதித்துள்ளனர். ராயும் ஆற்றில் குதித்து உள்ளார். இதில் சேற்றில் சிக்கிய அவர் வெளியே வரமுடியாமல் உயிரிழந்து விட்டார்.
எல்லை பாதுகாப்பு படை ரோந்து குழுவினர் 11 இந்தியர்கள் மற்றும் வங்காளதேச நபர் ஒருவரை கைது செய்தனர். 74 பசுக்களையும் மீட்டனர். அதன்பின் இவை அனைத்தும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.