பாலகோட்டில் விமானப் படைகள் தாக்குதல்; இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: தீவிரவாத முகாம்களை மூட பாகிஸ்தானுக்கு அறிவுரை

பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. மேலும் தீவிரவாத முகாம்களை மூடவேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானில் இந்திய விமானப் படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்துள்ளன. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருடன் நான் பேசினேன்.

இரு நாடுகளிடையே உள்ள பகைமை உணர்வை கைவிடுமாறு நான் இருவரிடமும் வலியுறுத்தினேன். மேலும் போர் நடவடிக்கைகள் எதையும் தொடங்க வேண்டாம் என்றும் பாகிஸ்தானிடம் நான் வலியுறுத்தினேன். அந்த பிராந்தியத்தில் அமைதி தொடரவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அதே நேரத்தில் தீவிரவாதம் வேரறுக்கப்படவேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதை பாகிஸ்தான் விட்டுவிடவேண்டும். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது அந்த நாடு நடவடிக்கை எடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். அங்குள்ள முகாம்கள் மூடப்படவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. மேலும் புல்வாமா தாக்குதலையும் அங்குள்ள தீவிரவாதிகள் சமூக வலைதளங்களில் கொண்டாடியுள்ளனர்.

எனவே தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.