எச்.ஏ.எல். நிறுவன தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் ராணுவ தளபதி பறந்து ஆய்வு செய்தார்

ராணுவத்துறை சார்பில் 12-வது சர்வதேச விமான கண்காட்சி நேற்று முன்தினம் பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, இஸ்ரேல், இத்தாலி உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் விமான உற்பத்தி நிறுவனங்கள் கலந்துக்கொண்டுள்ளன.

அந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் பற்றிய விவரங்களுடன் தனித்தனி அரங்குகளை அமைத்துள்ளன. இந்த நிலையில் கண்காட்சியின் 2-வது நாள் நிகழ்ச்சியில் இந்திய போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன. விமானங்கள் அங்குமிங்கும் சீறிப்பாய்ந்தும், கீழும் மேலுமாக பாய்ந்தும், வட்டமடித்தப் படியும் வானில் வர்ண ஜாலங்கள் நிகழ்த்தின. இந்த சாகச நிகழ்ச்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 2-வது நாளான நேற்று விமான கண்காட்சி மற்றும் சாகசங்களை கண்டு ரசிக்க இளம்பெண்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் அதிகளவில் வந்திருந்தனர்.
மேலும் ஆளில்லாத போர் விமான ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆளில்லாத விமான தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டன. 3 நிலைகளில் போட்டி நடத்தப்பட்டது. பொருட்களை கண்டறிதல், அதிக எடை கொண்ட ெபாருட்களை கீழே இறக்குதல், பாதுகாப்பு ஆகிய 3 நிலைகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது. முதல் முறையாக இந்த ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்கள் வானத்தில் வட்டமடித்ததை கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி தொழில்நுட்ப பல்கலைக் கழகம், தக்‌ஷா நிறுவனம், ஐ.டி.ஆர்.எல். நிறுவனம் ஆகியவற்றுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் எச்.ஏ.எல். நிறுவனத்தின் தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தில் நேற்று ராணுவ தளபதி பிபின் ராவத் பறந்தார். மேலும் அதன் செயல்பாடுகளை அவர் பறந்தபடி ஆய்வு செய்தார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிறந்த போர் விமானம்

தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தது, அருமையான அனுபவமாக இருந்தது. இது எனது வாழ்நாள் அனுபவம். வானத்தில் பறக்கும் மின்னணுவியல் தொழில்நுட்பத்தில் இது சிறந்த போர் விமானம் ஆகும். இலக்கை தாக்கும் முறை சிறப்பானதாக இருக்கிறது. இந்த தேஜஸ் போர் விமானம் விமானப்படையில் சேர்க்கப்படும்.

இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.
இந்த தேஜஸ் விமானத்தை ஒப்படைக்கும் வகையில் அதற்கான சான்றிதழ் விமானப்படை தலைமை தளபதி பி.எஸ்.தனோபாவாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இறுதி செயல்பாட்டு சான்றிதழும் விமானப்படை தலைமை தளபதியிடம் வழங்கப்பட்டது.

தொடக்க செயல்பாட்டு சான்றிதழ்

இந்த தேஜஸ் விமானத்திற்கு கடந்த 2013-ம் ஆண்டு தொடக்க செயல்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எலகங்கா விமானப்படை தளத்தை சுற்றிலும் உள்ள கட்டிடங்கள் மற்றும் மெயின் ரோட்டில் ஏராளமான பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உலோக பறவைகள் வானில் நிகழ்த்திய பல்வேறு சாகச நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.
மேலும் ராணுவ போர் தடுப்பு ஒத்திகையிலும் ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இதையொட்டி எலகங்கா விமானப்படை தளத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமானத்துறை தொடர்பான கருத்தரங்குகள் நேற்று நடைபெற்றன.

இந்த விமான கண்காட்சி மற்றும் விமான சாகசங்கள் வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தினத் தந்தி

Leave a Reply

Your email address will not be published.