மசூத் அசாருக்கு எதிராக உலகளவில் பயண தடை, சொத்துகளை முடக்க ஐ.நா.விடம் வலியுறுத்தல்

அமெரிக்கா உள்பட 3 நாடுகள் மசூத் அசாருக்கு எதிராக உலகளவில் பயண தடை, சொத்துகளை முடக்க ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளன.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கடந்த 14ந்தேதி சென்று கொண்டிருந்த துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டது. இந்த இயக்கத்தின் தலைவனாக மவுலானா மசூத் அசார் இருந்து வருகிறான். தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று முன்தினம் இந்திய தரப்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் தீவிரவாத பயிற்சி பெறுவோர், தளபதிகள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

இதனை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் ஐ.நா. அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என நேற்று கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகளுடன் ஆயுத விற்பனை செய்ய அதிகாரப்பூர்வ தடை, உலகளவில் பயணம் செய்ய தடை மற்றும் சொத்துகளை முடக்க 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்த 3 நாடுகளும் கோரிக்கை விடுத்து உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.