மாலுமியான மீன்பிடி தொழிலாளி: கடலோர காவல் படையில் பணி நியமனம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில், மீன்பிடி தொழிலாளியாக இருந்த இளைஞர் அதிகாரிகளின் வழிகாட்டுதலால், கடலோர காவல்படை மாலுமியாக பணி நியமனம் பெற்றுள்ளார். வரும், 15ல் இதற்கான பயிற்சியில் சேர உள்ளார்.


தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஆரோக்கியதாஸ். இவர், 25 லட்சம் ரூபாயில் படகு வாங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார்.கடந்த, 2015, நவ.,1ல் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக, ஆரோக்கியதாஸ் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டார். படகையும் பறிமுதல் செய்தனர்.இலங்கை சிறையில் இருந்த ஆரோக்கியதாஸ், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுவிக்கப்பட்டார்.படகு இல்லாததால், இவரது இரண்டாவது மகன், டியோடஸ், 18, பிளஸ் 2 முடித்தவுடன் வீட்டின் பொருளாதார நிலை கருதி, மீன் பிடி தொழிலுக்கு சென்றார்.

டியோடஸ், மீன் வளத்துறை கூடுதல் இயக்குனர் சமீரனுக்கு, அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், ‘படகு பறிபோனது. தந்தையும், தானும் மீன் பிடி தொழிலில் இருப்பதால் குடும்பம் கஷ்ட நிலையில் இருப்பதாகவும், படகை மீட்டுத் தர வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.


ஊக்கப்படுத்திய அதிகாரிகுறுஞ்செய்தியை பார்த்த இயக்குனர் சமீரன், டியோடசை பாராட்டி, மீனவர்களின் குழந்தைகளுக்கு, நடத்தப்படும் இலவச பயிற்சி மையத்தில், அவருக்கு பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.இங்கு பயிற்சி பெற்ற அவரை, கடலோர காவல் படைக்கான போட்டி தேர்வில் பங்கேற்கவும் அறிவுரை வழங்கினார்.


இலவச பயிற்சி மையத்தில், 90 நாட்கள் பயிற்சிக்குப்பின், தேர்வு எழுதிய டியோடஸ் தேர்ச்சி பெற்றார். இதில் தேர்வு பெற்ற டியோடஸ் மாலுமி பணிக்கு தேர்வானார்.ஒடிசாவில் உள்ள, இந்திய கப்பல் படை சில்காவில் அவருக்கு, மூன்று மாதம் கப்பல் குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது. வரும்,15ல் சென்னையில் இந்திய கடலோர காவல் படையின் சவுரியா கப்பலில் ஒரு மாத பயிற்சியில் சேர உள்ளார்.அதன் பின், மும்பை கப்பல் படையில் தொழிலக பயிற்சி வழங்கப்பட்டு, கப்பல் மாலுமியாக பணி நியமனம் செய்யப்படவுள்ளார்.

இதுகுறித்து, டியோடஸ் கூறியதாவது:என் தந்தை, இலங்கை கடற்படையால் பாதிக்கப் பட்டதால், குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மேல்நிலைக்கல்விக்கு செல்ல முடியாமல், மீனவத் தொழிலாளியாக இருந்தேன். இயக்குனர், சமீரன் அறிவுரைப்படி, இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து வெற்றி பெற்று, இந்திய கடலோர காவல் படையில் மாலுமியாக பயிற்சி எடுத்து வருகிறேன்.விரைவில் கப்பலில் மாலுமியாக நியமிக்கப்படஉள்ளேன். இது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.இவ்வாறு, அவர்கூறினார்.

நன்றி: தினமலர் 

Leave a Reply

Your email address will not be published.