புல்வாமா தாக்குதல்: ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது?, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா?- காஷ்மீர் ஆளுரின் ஆலோசகர் விஜயகுமார் விளக்கம்

புல்வாமா தாக்குதல்: ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது?, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா?- காஷ்மீர் ஆளுரின் ஆலோசகர் விஜயகுமார் விளக்கம்

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் தற்கொலைப்படைத் தீவிரவாதி பயன்படுத்திய ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது, உளவுத்துறை ஏதேனும் எச்சரிக்கை விடுத்தார்களா என்பது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் கே.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் ஆலோசகரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான கே.விஜயகுமார் ஸ்ரீநகரில் இருந்து தொலைபேசி வாயிலாக ‘தி இந்து’வுக்கு (ஆங்கிலம்) அளித்த பேட்டி:

உளவுத்துறையினரிடம் இருந்து முன்னெச்சரிக்கை ஏதும் விடுக்கப்பட்டதா?

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. வாகனச் சோதனை, தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு உள்ளிட்டவை பலப்படுத்தப்பட்டு இருந்தன.

ஆனால், உளவுத்துறையிடம் இருந்து எப்போது தாக்குதல் நடக்கும், எங்கே தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறித்த தெளிவான தகவல் எங்களுக்கு இல்லை. ஆனால், வழக்கமான பாதுகாப்பு விதிகளின்படி மட்டும் ஆயுதப்படை பாதுகாப்பு வீரர்கள் மட்டும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதியும் சமீபத்தில் கொல்லப்பட்டார். ஆனால், அதைத் தொடர்ந்து எங்களுக்கு உளவுத்துறையிடம் இருந்து எந்தவிதமான தகவலும் இல்லை.

வியாழக்கிழமை நடந்த தாக்குதலுக்கு முன்கூட எங்களுக்கு எங்களுக்கு எந்த எச்சரிக்கையும் உளவுத்துறை மூலம் விடுக்கப்படவில்லை. அவ்வாறு ஏதேனும் தகவல் இருந்தால், நாங்கள் நடவடிக்கை எடுத்துத் தடுத்திருப்போம்.

விமானம் மூலம் துணை ராணுவப்படையினர் அழைத்துச் செல்ல வாய்ப்பிருந்ததா?

வீரர்களை விமானத்தில் அழைத்துச் சென்றிருந்தால், தாக்குதலைத் தவிர்த்திருக்கலாம் என்பது தீர்வு அல்ல. ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை விமானத்தைப் பயன்படுத்தினால், எப்படியும், ஸ்ரீகர் விமான நிலையம் வரை வீரர்கள் அனைவரும் சாலை மார்க்கமாகவே செல்ல வேண்டியது இருக்கும்.

அனைத்து பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆர்டிஎக்ஸ் மருந்து எவ்வாறு கொண்டு வரப்பட்டது?

ஸ்ரீநகர் நெடுஞ்சாலையை எப்போதும் போக்குவரத்து இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது சாத்தியமில்லை. நெடுஞ்சாலை பகுதியில் இணையும் வகையில் ஏறத்தாழ 70 இடங்களில் சிறுசாலைகள் குறுக்கிடுகின்றன. இருபுறமும் 35 சாலைகள் இருக்கின்றன. இந்த இணைப்புச் சாலைகள் வழியே எந்த வாகனமும் தேசிய நெடுஞ்சாலையை அடைந்துவிட முடியும்.

அதேபோல வாகனங்களின் பெருக்கமும் அதிகமாக இருக்கிறது. ஆதலால், வாகனச் சோதனை என்பது, இன்னும் மக்களுக்குக் கூடுதல் சிரமத்தையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தும்.

ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குக் குறிப்பிட்ட காலத்தில் கடத்தப்பட்டு ஒன்றுசேர்க்கப்பட்டு, இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.

இந்தத் தாக்குதலை தனியாக ஒரே ஒரு தீவிரவாதி மட்டுமே நடத்தி இருக்கிறார். இந்தத் தாக்குதல் நடந்து முடிந்த பின் எந்தவிதமான துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தத் தாக்குதலுக்கு யார் மூளையாக இருந்தது என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். யாரேனும் துணை ராணுவப்படையினர் வாகனத்தைக் கண்காணித்தார்களா என்பதையும் விசாரித்து வருகிறோம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. சுற்றுலா இடங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. மக்கள் சுதந்திரமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சுற்றுலா வந்து செல்லாம்.

இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.