இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடம் முறையிடுவோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாத முகாம்கள் மீது வீசி அவற்றை முற்றிலுமாக அழித்தன. ஆனால் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை, இது இந்தியாவின் பிரசாரமாகும், இந்திய விமானப்படைகள் எல்லைக்கட்டுப்பாடு கோடை தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டது என பாகிஸ்தான் கூறியது. மறுபுறம் எல்லையை தாண்டிய இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க எங்களுக்கும் உரிமை உள்ளது என கூறியது.
இந்நிலையில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடம் முறையிடுவோம் என தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் ராணுவ தளபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தியாவிற்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசுகையில், இந்தியாவின் அத்துமீறல் எங்கள் நாட்டின் இறையான்மையை மதிக்காத செயலாகும். பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதனை ஏற்க முடியாது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம். எங்களுக்கு ஆதரவான நாடுகளை அணி திரட்டுவோம். இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என கூறியுள்ளார்.