தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமமே வீட்டிற்கொருவரை ராணுவம், கடற்படை என எதாவது ஒரு பாதுகாப்பு படைக்கு அனுப்பும் பணியைச் செய்து வருகின்றது.
தூத்துக்குடியில் இருந்து 24 கி.மீ தூரத்தில், சுமார் 5000 குடும்பங்கள் வாழும் செக்காரக்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது.
இந்த ஊரைச் சேர்ந்த சிலர் இரண்டாம் உலகப்போரின்போது ராணுவத்தில் சேர்ந்தனர். அதுவே நாடு விடுதலை அடைந்தபின் இந்திய ராணுவத்தில் சேர்வதாகத் தொடர்ந்தது.
அவர்கள் விடுமுறைக்கு வரும்போது கிராம இளைஞர்களிடம் அதிகமாக நாட்டுபற்று பற்றி கூறினர். அது அப்பகுதி இளைஞர்ளை வெகுவாக ராணுவத்தில் சேர ஆர்வத்தை தூண்டியது.
அதுமட்டுமல்லாது அந்த கிராமத்தில் உள்ள சிலரை ராணுவத்தில் சேர்க்க அழைத்தும் சென்றனர்.
தற்போது இக்கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் என 2000க்கும் மேற்பட்டோர் ராணுவம், கடற்படை, தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் இங்கிருப்பவர்களில் 3000க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் படை வீரர்கள்.
இக்கிராமத்தை பொறுத்தவரை பிறக்கும் ஆண் குழந்தைகளை படை வீரர்களாக்க முயல்வது, பிறக்கும் பெண் குழந்தைகளை படை வீரர்களுக்கு திருமணம் செய்து வைப்பது ஆகியவற்றை ஒரு வழக்கமாகவே கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் தற்போது உள்ள கிராம இளைஞர்கள் காவல் படைகளில் சேர காலையும் மாலையும் தொடர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பிப்ரவரி 14 அன்று ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவம், ராணுவ கிராமம் என அழைக்கப்படும் செக்காரகுடி கிராம இளைஞர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல் படைகளில் பணியாற்றும் குடும்பத்தினரிடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் ராணுவ வீரர் சோமசுந்தரப் பெருமாள், “நான் ராணுவத்தில் பணியாற்றிய காலங்களில் பாதுகாப்புபடை வாகன தொடர் அணி செல்லும் வழியில் பொது மக்கள் நுழைய முடியாது. ஆனால், இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்ற சந்தேகம் எழுகிறது. நான் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது ராணுவத்தில் பணியாற்றியுள்ளேன்.
அப்போது தீவிரவாதிகள் ராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போராடுவார்கள். இப்போது அப்படி இல்லை என தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்புபடை வாகனத் தொடரணி செல்லும் வழியில் பொது மக்கள் செல்ல தடை விதித்து உள்துறை அமைச்சம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிமிடம் பேசிய ரிசர்வ் காவல் படை வீரர் கருப்பசாமி என்பவரின் மனைவி சிவகாமி, “எனது கணவர் 1999ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார் இருபது வருடங்களாக பணியாற்றி வருகிறார். ஆனால் 2004ஆம் ஆண்டுக்கு பிறகு பாதுகாப்பு படை வீரர் பணியில் சேர்பவர்களுக்கு ஓய்வுதியம் கிடையாது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பத்து வருடங்களுக்கு மேலாக நாட்டுக்காக பணியாற்றி விட்டு ஓய்வு பெறும்போது ஓய்வு ஊதியம் இல்லையென்றால் எப்படி எதிர்காலத்தை கழிக்க முடியும் என்ற அச்சம் எழுகிறது,” என்று கூறினார்.
ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி எடுத்து வரும் எம்.சுடலை பிபிசி தமிழிடம் பேசியபோது, “எங்கள் ஊரில் 5000 வீடுகள் உள்ளன. வீட்டுக்கு ஒருவர் நிச்சியமாக மத்திய ரிசர்வ் காவல் படை, ராணுவம், போன்றவற்றில் பணிகளில் உள்ளனர். எனது தாத்தா அப்பா காலங்களில் இருந்தே எங்கள் ஊரில் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். புல்வாமா தாக்குதல் சம்பவம் எங்கள் முயற்சியை பாதிக்காது. ஆனால் இச்சம்பவம் எங்களுக்கு ஒரு பாடம். நிச்சயம் இந்தாண்டு ராணுவத்தில் சேர்ந்து இச்சம்பவத்திற்கு பதிலடி கொடுப்போம்,” என தெரிவித்தார்.
வெள்ளையம்மாளின் மகன்கள் பல காவல் படைகளில் பணியாற்றுகின்றனர். “எனக்கு ஐந்து மகன்கள். அதில் இருவர் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையிலும், இருவர் ராணுவத்திலும் ஒருவர் தமிழக காவல்துறையிலும், பணியற்றி வருகின்றனர். இந்த செய்தியை பார்த்தவுடன் மிகவும் கஷ்டமாக இருந்தது,” என வருத்தத்துடன் கூறினார்.
மேலும் செக்காரக்குடி கிராம இளைஞர் சுப்பிரமணி பிபிசி தமிழிடம் பேசுகையில், “எங்கள் கிராம ‘இளைஞர்கள் பலரும் உடல் தகுதி தேர்வில் தேர்வாகிறோம். ஆனால், எழுத்து தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் தேர்வு நடப்பதால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே தமிழில் தேர்வு எழுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்தார்.
காஷ்மீர் தாக்குதல் – ‘போரில் சாவதைவிட தீவிரவாதியால் கொல்லப்படுவது வேதனையானது’
BBCtamil