இந்திய விமானப்படை விமானியை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்

சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரேடாரில் நேற்று காலை பாகிஸ்தானின்  எப் 16 ரக விமானங்கள் 10 என்ற எண்ணிக்கையில் நவ்ஷாரா விமானதளம் நோக்கி வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து எஸ் யூ 30 எம் கே ஐ மற்றும் மிக் 21 வகையைச் சேர்ந்த 2 விமானங்கள் ஸ்ரீநகர் மற்றும் அவந்திப்புரா விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டன.
இந்திய வான்பரப்பில் நுழைந்த பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை இந்திய விமானங்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் அந்த விமானம் பாகிஸ்தானின் வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
இந்திய வான்பரப்பில் நுழைந்த பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை இந்திய விமானங்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் அந்த விமானம் பாகிஸ்தானின் வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
அந்த விமானத்தை விரட்டிச் சென்ற மிக் 21 வகையைச் சேர்ந்த இந்திய விமானம் காணாமல் போனது தெரியவந்தது. அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தானில் இருந்து விமானி சிறைபிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகின.
இதையடுத்து முப்படைகளின் தலைமைத் தளபதிகள் மற்றும்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினர்.
பின்னர் பாகிஸ்தானின் பொறுப்பு தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து புல்வாமா தாக்குதல் குறித்த ஆதாரங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இந்திய விமானியை உடனே விடுவிக்கவேண்டும் என்றும் அவரிடம் கூறப்பட்டது.
விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சித்ரவதை செய்யக் கூடாது என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவா ஒப்பந்தப்படி சிறைப்பிடிக்கப்பட்ட இதர நாட்டு அதிகாரியை பாதுகாப்பாகவும் மரியாதையாகவும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட படத்தில் அபிநந்தன் ரத்தக்காயத்துடன் பாகிஸ்தான் ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்தியாவின் கண்டனத்திற்கு  பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து மற்றொரு புகைப் படத்தை வெளியிட்டுள்ளது.
இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அபிநந்தன் தேநீர் அருந்துவது போன்ற அந்த புகைப்படம் காட்சியளிக்கிறது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி இந்திய விமானப்படை விமானி நடத்தப்படுவார் என்றும் பாகிஸ்தான் ராணுவம் டிவிட்டர் செய்தி மூலம் உறுதியளித்துள்ளது. இதனிடையே தம்மை பாகிஸ்தான் அதிகாரிகள் துன்புறுத்தவில்லை என்று அபிநந்தன் கூறுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.