”புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன” அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம் 

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது.

காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் தலையீடு  இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், புல்வாமா தாக்குதலில் அடுத்தகட்ட நகர்வுகள், திட்டங்கள் குறித்து ராணுவ வீரர்களே முடிவு செய்வர் என்று கூறினார். மேலும் நாட்டை பாதுகாப்பாக எப்படி வைத்துக்கொள்வது என்பது இந்தியாவுக்கு நன்றாக தெரியும் என கூறிய அவர், தீவிரவாதத்தை பாகிஸ்தான் இனியும் நிறுத்திக்கொள்ளாவிடில், இந்தியா பேசிக்கொண்டிருக்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது என திட்டவட்டமாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.