வீர மரணமடைந்த கணவரின் உடலை முத்தமிட்டு வழியனுப்பிய மனைவி: நெஞ்சை உலுக்கும் வீடியோ

வீர மரணமடைந்த கணவரின் உடலை முத்தமிட்டு வழியனுப்பிய மனைவி: நெஞ்சை உலுக்கும் வீடியோ

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த மேஜரின் இறுதிச் சடங்கின்போது அவரின் உடலை முத்தமிட்டு மனைவி இறுதியாக வழியனுப்பி வைத்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில்  ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேஜர் விஎஸ் தவுன்டியால், கான்ஸ்டபிள் சிவராம், சிப்பாய் அஜய் குமார், ஹரி சிங் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த வீரர் குல்சார் முகமது ஸ்ரீநகரில் உள்ள பாதாம்பிபாஹ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர்  விஎஸ் தவுன்டியாலின் இறுதிச் சடங்கு இன்று டேராடூனில் நடைபெற்றது. அப்போது ‘பாரத் மாதா கி ஜே’, ‘மேஜர் தவுன்டியால் என்றும் நிலைத்திருப்பார்’, ‘பாகிஸ்தான் வீழ்த்தப்படும்’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இறுதிச் சடங்கில், அவரின் மனைவி நிகிதா கவுல் கனத்த மவுனத்துடன் கலந்துகொண்டார். நீண்ட நேரம் வீர மரணம் அடைந்த கணவரின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவர், இறுதியாக ஒருமுறை அவருடன் பேசினார்.

அவரின் உடலை முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரின் உடலை அடக்கம் செய்யும் சடங்குகள் நடைபெற்றன.

இதேபோல உயிரிழந்த சிப்பாய் அஜய்குமாரின் தாய் மீரட்டில் பேசும்போது, ”நாட்டுக்காக என்னுடைய மகனை இழந்ததில் பெருமை கொள்கிறேன். இந்தியாவால் அழிக்க முடியாத அளவு பாகிஸ்தான் ஒன்றும் பெரிய நாடல்ல. ஒரு நாள் இந்தியா நிச்சயம் பாகிஸ்தானை அழிக்கும்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.