காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி வீரருக்கு நாளை இறுதிச்சடங்கு!

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி வீரர் சுப்பிரமணியத்தின் உடல் நாளை அடக்கம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 38 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் சுப்பிரமணியனும் வீரமரணம் அடைந்தார். இவரது உடல் நாளை காலை 8.00 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, பின்னர் தரை மார்க்கமாக 12.00 மணியளவில் தூத்துக்குடி கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் முழு அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிசடங்குகள் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இறுதி நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிராம்பா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

உயிரிழந்த இராணுவ வீரர் சுப்பிரமணியத்தின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அந்த தொகை சுப்பிரமணியத்தின் குடும்பத்தாரிடம், அமைச்சர் கடம்பூர் ராஜூ நாளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.