Breaking News

நாட்டிற்கு எதிரான எந்த சவாலையும் சந்திக்கத் தயார் என முப்படைத் தளபதிகள் திட்டவட்டம்

நாட்டிற்கு எதிரான எந்த சவாலையும் சந்திக்கத் தயார் என பிரதமர் மோடியை சந்தித்த முப்படைத் தளபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தும், பாகிஸ்தானுக்குள் ஊடுருவியும் இந்திய விமானப்படை நேற்று பயங்கரவாதிகளின் மூன்று முகாம்களை குண்டு வீசி அழித்தது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய எடுத்த இந்த நடவடிக்கையால் 350 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்த பிரதமர், விமானப்படை மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார். மாலையில், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பாகிஸ்தான் திருப்பித் தாக்கக் கூடும் என்பதால் முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் மோடி முப்படைகளுக்கும் உத்தரவிட்டார். நாட்டிற்கு எதிரான எந்த சவாலையும் சந்திக்கத் தயார் என அப்போது தளபதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலை பிரதமர் மோடி விடிய விடிய நேரடியாக கவனித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 3 மணிக்கு பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலை பிரதமர் மோடி நேரடியாக கவனித்து வந்ததாகவும் அவருக்கு உடனுக்குடன் விவரம் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி வீட்டில் இருந்தாரா வெளியிடத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விமானத் தாக்குதலை கண்காணித்து வந்தாரா என்பது குறித்து விளக்கம் வெளியிடப்படவில்லை. தாக்குதல் ஏற்பாடுகள் தொடங்கியதில் இருந்து முடிவடையும் வரை அவ்வப்போது பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், விமானப் படைத் தளபதி பி.எஸ்.தனோவா ஆகியோருடன் பிரதமர் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தச் சென்ற வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்பிய தகவலை அறிந்தபின், அதிகாலை 4.30 மணி அளவில் விமானப் படையினருக்கு தமது பாராட்டுகளை தெரிவித்துவிட்டே பிரதமர் ஓய்வெடுக்க சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் முகாம்கள்மீதான தாக்குதல் குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில், ஐ.நா.சபை, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா , வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளின் தலைவர்களையும் அமைச்சர்களையும் தொலைபேசியில் அழைத்து இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் குறித்த விவரங்களை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
தீவிரவாதத்தை இனி ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது என்ற செய்தி இதன் மூலம் உலக நாடுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் உரத்த குரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.