இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பஹவல்பூரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம், தாமாக முன்வந்து பொறுப்பேற்றபோதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆதாரம் கேட்டு கொக்கரித்தார்.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியபோதும், பாகிஸ்தான் அரசு அசைந்து கொடுக்கவில்லை. இதற்கு நேர் எதிராக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை பாதுகாப்பதிலேயே, பாகிஸ்தான் மிகுந்த கவனம் செலுத்தியது. தொடர்ந்து அமைதி காத்த இந்தியா, இன்று அதிகாலை, பால கோட் உள்ளிட்ட பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முக்கிய முகாம்களை அழித்தொழித்தது.
இந்தியாவின் கடுமையான பதிலடியால் பேரச்சத்தில் ஆழ்ந்திருக்கும் பாகிஸ்தான், செய்வதறியாது திகைத்து வருகிறது. இன்று காலை, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹம்முத் குரேஷி (Shah Mahmood Qureshi), முன்னாள் செயலாளர்கள், தூதர்களோடு ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில், பாகிஸ்தான் அமைதியை விரும்புவதாகவும், ஆனால், இந்தியா தான் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், குரேஷி அங்கலாய்த்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். இதில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.