காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை

காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்களை இளைஞர்கள் அரங்கேற்றுவார்கள் எனவும், வாழ்வா ? சாவா? நிலையில் அவர்கள் இருப்பதாகவும், பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் தற்போது, வரை ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் போன்ற பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களே தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வந்துள்ள நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கமும் இத்தகைய எச்சரிக்கையை விடுத்து இருப்பது, காஷ்மீரில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் , துணை ராணுவப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி ஐந்து நாட்களே ஆகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ரியாஸ் நைகூ, பேசியதாக கூறப்படும், ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், நீங்கள்(பாதுகாப்பு படை) இங்கு (காஷ்மீர்) இருக்கும் வரை தொடர்ந்து அழுகுரல் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்.

உங்கள் ராணுவம் இங்கு இருக்கும் வரை வீர சவப்பெட்டிகள் நிரம்பிக்கொண்டே இருக்கும். நாங்கள் சாகத்தயாராக இருக்கிறோம். ஆனால், உங்களை வாழ விட மாட்டோம். எங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்து விட்டோம். சரண் அடைவதை விட இறப்பதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். எங்களின் 15 வயது சிறுவன் கூட தற்கொலைப்படை தீவிரவாதியாக மாறி உங்கள் வாகனத்தை தகர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடிமைத்தனத்தை விட இறப்பதே மேல். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் இருக்கும் வரை இத்தகைய தாக்குதல் நீடிக்கும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, காஷ்மீரில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு படை தயாராக இருப்பதாக லெப்டினட் ஜெனரல் கன்வால் ஜீத் சிங் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.