புல்வமா தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம், தங்களுக்கு தொடர்பு இல்லை என்கிறது

புல்வமா தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம், தங்களுக்கு தொடர்பு இல்லை என்கிறது

காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில், நேற்று மாலை 78 வாகனங்களில் சென்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது,  அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரில் வந்த பயங்கரவாதி ஒருவன், காரை பேருந்து மீது மோதி வெடிக்கச்செய்தான்.

அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநா சபையும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானும் புல்வமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் வருத்தத்திற்குரியது.

உலகின் எந்த பகுதியிலும் வன்முறை நடைபெற்றாலும் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விசாரணை நடத்தாமலே  இந்த தாக்குதலுக்கு எங்கள் மீது பழி போடும் இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்களின் கருத்துக்களை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் ஆசாருக்கு பாகிஸ்தானே அடைக்கலம் கொடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.